காஸாவுக்கு 9 டன் உதவிப்பொருள் அனுப்பிய சிங்கப்பூர்

1 mins read
aa22ac6c-80d5-4304-ab3a-298e117109a3
விமானம் புறப்படும்போது வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் அங்கிருந்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

காஸா மக்களுக்கு உதவும் விதமாக சிங்கப்பூர் ஆகாயப்படையின் விமானம் கிட்டத்தட்ட 9 டன் உதவிப்பொருள்களுடன் ஜோர்டான் கிளம்பியுள்ளது.

அந்த விமானம் சாங்கி விமானத் தளத்தில் (கிழக்கு) இருந்து புதன்கிழமை (பிப்ரவரி 12) கிளம்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவப் பொருள்கள், உணவுப் பொருள்கள், சுகாதாரம் தொடர்பான பொருள்கள் ஆகியவை உதவிப்பொருள்களாக அனுப்பப்பட்டன.

விமானம் புறப்படும்போது வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் அங்கிருந்தார்.

காஸாவுக்கு உதவிப்பொருள் சரியாகச் சென்றடைய ஜோர்டானிய அமைப்புகளுடன் சிங்கப்பூர் வேலை செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.

தற்போது நடைமுறையில் உள்ள போர் நிறுத்தம் மூலம் உதவிப்பொருள்கள் காஸா மக்களுக்கு விரைவாகச் சென்றடையும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறினார்.

சிங்கப்பூர் ஆயுதப் படையின் சாங்கி வட்டார மனிதாபிமான உதவி அமைப்பும், பேரிடர் நிவாரண ஒருங்கிணைப்பு நிலையமும் இணைந்து உதவிப் பொருள்களுக்கான ஏற்பாடுகளைச் செய்தன.

உதவிப்பொருள்கள் ஜோர்டானின் ஹ‌ஷ்மைட் அறநிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்று தற்காப்பு மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகமது தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்