இவ்வாண்டின் இரண்டாம் பாதியில் தென்கிழக்காசிய வட்டாரத்தில் கடுமையான புகைமூட்டம் ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளதாக அனைத்துலக விவகாரங்களுக்கான சிங்கப்பூர் கழகம் எச்சரித்துள்ளது.
எல் நினோ பருவநிலை மாற்றமும், உயிர்எரிபொருள் (Biofuel) தேவைகளுக்காக காடுகள் அழிக்கப்படுவதும் இதற்கு முக்கியக் காரணங்கள் என்று கழகத்தின் ஆண்டு அறிக்கை தெரிவித்தது.
பொருளியல் நிச்சயமற்ற தன்மை, நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில், இம்முறை எல் நினோ நிகழ்வு வழக்கத்தை விட நீண்ட, கடுமையான வறட்சிக் காலத்தை உருவாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து அறிக்கை வெளியிட்டு வரும் கழகம் ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுத்திருப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன் 2023ல் இதேபோன்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
எல் நினோ என்பது கிழக்கு பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பமடைவதைக் குறிக்கிறது.
இந்தச் சுழற்சி ஒரு ‘சூப்பர் எல் நினோவாக’ மாறக்கூடும் என்று அறிவியலாளர்கள் கணித்துள்ளனர். 2026, 2027ஆம் ஆண்டுகள் கடுமையான வெப்பமான ஆண்டுகளாக இருக்கும்.
ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் இந்தியப் பெருங்கடலின் கிழக்கு, மேற்கு பகுதிகளுக்கு இடையேயுள்ள மேற்பரப்பு வெப்பநிலையில் ஏற்படும் வேறுபாட்டினால் மற்றொரு பருவநிலை மாற்றமும் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவை இரண்டும் இணைந்து சிங்கப்பூரில் வறட்சியான பருவநிலை அக்டோபர் வரை நீடிக்கலாம் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் எச்சரித்துள்ளது.
இத்தகைய இரட்டை பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்ட 1997, 2015ஆம் ஆண்டுகளில் கடுமையான புகைமூட்டம் ஏற்பட்டது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தோனீசியா, ஜோகூரில் ஏற்கெனவே காட்டுத்தீ பதிவாகியுள்ளது.
வறண்ட, வெப்பமான பருவநிலை நிலவுவதால் தீ வேகமாகப் பரவி, வாரக்கணக்கில் எரிந்து அணைப்பதற்கு கடினமாகிவிடுகிறது.
தற்போதைய எரிசக்தி நெருக்கடி, அதிகரித்துள்ள உரங்களின் விலை காரணமாக, சில உற்பத்தியாளர்கள் உணவு, எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய செலவுகுறைந்த வழியில் நிலங்களைச் சுத்தம் செய்யும் ‘வெட்டி எரிக்கும்’ தவறான உத்திகளைக் கையாளலாம் என்று அறிக்கை கூறுகிறது.

