வளர்ந்துவரும் சொத்து நிர்வாகத் துறையில் புதிய வாய்ப்புகளைக் கைப்பற்ற, சிங்கப்பூர் இடர் நேரும் சாத்தியமுள்ள முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சரும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் துணைத் தலைவருமான சீ ஹொங் டாட் கூறியிருக்கிறார்.
புதன்கிழமை (ஜூலை 9) டிபிஎஸ் வங்கிக்கு வருகையளித்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
உயர் தரநிலையைத் தக்கவைத்துக்கொள்ளவும் வசதியான, நம்பகமான நிதி நடுவமாகத் திகழவும் கடுமையாக முயலும் வேளையில் இடர் நேரும் சாத்தியமுள்ள சில நடவடிக்கைகளில் ஈடுபடவும் சிங்கப்பூர் தயாராக இருப்பது அவசியம் என்றார் அவர்.
“நமது அணுகுமுறை இடரின் தன்மைக்கேற்ப செயல்படக்கூடியதாக இருக்கும். இடர் நேரும் சாத்தியம் அறவே இல்லாத அணுகுமுறையாக இருக்காது. ஏனெனில், ‘கியாசு’ மனநிலையில் செயல்பட்டால் நம்மால் புதிய வாய்ப்புகளைக் கைப்பற்ற முடியாமல் போகக்கூடும்,” என்றார் அமைச்சர்.
எனவே ஒரு சமநிலையுடன், உயர் தர நிலையை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று அமைச்சர் சீ வலியுறுத்தினார்.
ஊக அடிப்படையிலான மதிப்பீடுகளையும் வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதில் நேரும் தாமதத்தையும் தவிர்க்க, வங்கிகளும் அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டிய அம்சங்கள் தொடர்பில் துறை சார்ந்தோருடன் ஆணையம் இணைந்து செயல்படும் என்றார் அவர்.
கடந்த ஐந்தாண்டுகளில் சொத்து நிர்வாகத் துறையில் சிங்கப்பூர் சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளதாக அமைச்சர் சீ கூறினார்.
பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் ஏறத்தாழ 800 பேரை ஈர்ப்பது இந்நிகழ்ச்சியின் நோக்கம்.