சிங்கப்பூரும் கஸக்ஸ்தானும் அவற்றின் விமானப் போக்குவரத்துத் துறையின் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்தும் ஒப்பந்தத்தில் வியாழக்கிழமை (அக்டோபர் 29) கையெழுத்திட்டன.
சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும் (சிஏஏஎஸ்) கஸக்ஸ்தானின் விமானத்துறை நிர்வாக அமைப்பும் (ஏஏகே) கையெழுத்திட்ட இருநாடுகளின் நோக்கங்கள் உள்ளடங்கிய அறிக்கையில் (எஸ்ஓஐ) தொழில்நுட்ப மேம்பாட்டுடன் நல்லுறவை வளர்ப்பது, மக்களும் பொருள்களும் சரளமாக வந்து செல்வது, இருநாடுகளையும் வட்டாரங்களையும் வர்த்தக வாய்ப்புகளையும் இணைப்பது போன்ற அம்சங்கள் அடங்கியுள்ளன.
அந்த ஒப்பந்தத்தில் சிஏஏஎஸ் அமைப்பின் தலைமை இயக்குநர் ஹான் கொக் ஜுவான், ஏஏகே அமைப்பின் மைக்கல் டேனியல் இருவரும் கையெழுத்திட்டனர்.
சிங்கப்பூருக்கு வருகை தந்துள்ள ஏஏகே அமைப்பு உறுப்பினர்களுடன் திரு மைக்கல் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்.
தென்கிழக்காசியாவில் சிங்கப்பூரும் மத்திய ஆசியாவில் கஸக்ஸ்தானும் அவை அமைந்துள்ள வட்டாரங்களின் முக்கிய விமானத் துறை மையங்களாகத் திகழ்கின்றன.
அண்மைய ஆண்டுகளில் அப்பகுதிகளின் விமானப் போக்குவரத்து குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சி அடைந்துள்ளன.
எதிர்காலத்தை முன்வைத்து, விமானத் துறையின் முக்கிய அங்கங்களான பாதுகாப்பு, நீடித்த நிலைத்தன்மை, புத்தாக்கம், வளர்ந்துவரும் தொழில்நுட்பம், திறனாளர்களுக்கான பயிற்சி, மனிதவள மேம்பாடு போன்றவற்றை உத்திப்பூர்வ பங்காளித்துவத்தின் வழியாக செயல்படுத்த தற்போதைய ஒப்பந்தம் வழிவகை செய்யும்.
இருநாடுகளுக்கும் கடந்த 2024ஆம் ஆண்டில் கையெழுத்தான பயிற்சி ஒத்துழைப்பு உடன்பாட்டின்படி, தற்போது செயல்பாட்டில் உள்ள ஒருங்கிணைந்த செயல்முறைகள் புதிய ஒப்பந்தம் கையெழுத்தானதால், பரந்த அளவில் விரிவடையும்.
அதோடு இந்த விரிவடைந்த ஒத்துழைப்பை வரவிருக்கும் 2027ஆம் ஆண்டில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்ஓயூ) ஒன்றை செய்துகொண்டு அதிகாரபூர்வமாக்கும் திட்டத்தையும் இருநாடுகளும் பரிசீலனை செய்கின்றன.
அந்த உடன்பாட்டில் கையெழுத்திட, அப்போது சிஏஏஎஸ் அமைப்பு கஸக்ஸ்தானுக்குப் பயணம் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.
அப்புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்தாகும்போது இருநாட்டு உயர்மட்ட அரசாங்க அமைப்புகளின் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்படும்.
சிவில் விமானப் போக்குவரத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான அடித்தளம் வலுவாக்கப்பட்டு ஆண்டுப் பொதுக்கூட்டங்கள் இருநாடுகளிலும் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்படும். அக்கூட்டங்களில் இரு அமைப்புகளின் தலைவர்களும் தலைமை தாங்குவர்.
பொதுக்கூட்டங்களில் மேலும் ஒத்துழைப்பை வளர்த்தெடுக்கப் புதிய வாய்ப்புகள் அடையாளம் காணப்படும். அனுபவம், செயல்முறை, விதிமுறை, தொழில்நுட்பம் உட்பட பல அம்சங்களை இருநாடுகளும் பகிர்ந்துகொள்வது வர்த்தக வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்தனர்.
