அறியப்படாத நாயகர் விருதுகள்: ஜூன் 15 வரை முன்மொழியலாம்

2 mins read
29329c0b-027a-4dfb-b508-a9dd3855dc9e
‘கருணை மிகுந்த வெளிநாட்டவர்’ பிரிவின்கீழ் சென்ற ஆண்டுக்கான அறியப்படாத நாயகர் விருதைப் பெற்ற அப்துல் கரீம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டின் சிங்கப்பூர் அறியப்படாத நாயகர் விருதுகளுக்கு (Silent Heroes Awards) முன்மொழியும் நடவடிக்கை தொடங்கிவிட்டது.

விளம்பரமின்றி அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள அன்றாடத் தனிநபர்களை இந்த விருதுகள் அங்கீகரித்து வருகின்றன. லாபநோக்கில்லா அமைப்பான சிங்கப்பூர் குடிமக்கள் சங்கம் (Civilians Association of Singapore) அறியப்படாத நாயகர் விருதுகளுக்கு ஏற்பாடு செய்துவருகிறது.

நல்லது செய்வதைப் பகிர்ந்துகொள்வதற்கும் நல்லது செய்வதற்குப் பிறரை ஊக்குவிப்பதற்குமான தளமாக விளங்குவது அறியப்படாத நாயகர் விருதுகளின் நோக்கமாகும். தொடர்ந்து ஆக்கபூர்வமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான உந்துதலை விருதுப் பெற்றவர்களுக்கு அளிப்பதும் இலக்கு.

கனிவன்பு, அன்பு, மீள்திறன் ஆகிய குணாதிசயங்களே வலுவான, கருணை மிகுந்த தேசத்தின் அடித்தளம் என்பதை நினைவூட்டும் ‘அன்றாட நாயகர்’களை இவ்விருதுகளுக்கு முன்மொழியுமாறு பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அறியப்படாத நாயகர் விருதுகள், இவ்வாண்டு ஐந்து பிரிவுகளின்கீழ் தனிநபர்களுக்கு வழங்கப்படும்.

அளவுகடந்த கருணையையும் சேவையையும் வெளிப்படுத்தும் உடற்குறையுள்ள தனிநபர்களுக்கான ‘மனிதநேய இதயம்’ (Heart of Humanity), தொடர்ந்து தொண்டுழியத்தில் ஈடுபட்டு தங்கள் சமூகங்களுக்குக் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றியுள்ள ‘அசாதாரணமான பெரியவர்’ (Outstanding Adult), செயல்மூலம் தங்கள் சகாக்களையும் சமூகத்தையும் ஊக்கமளித்து கைதூக்கிவிட்ட ‘நம்பிக்கை தரும் இளையர்கள்’ (Inspiring Youth), ஆக்ககரமான சமுதாய அல்லது சமூகத் திட்டங்களைத் தொடங்கியுள்ள ‘நம்பிக்கை முன்னோடி’ (Pioneer of Promise), சிங்கப்பூரில் உள்ள சமூகங்கள்மீது அளவுகடந்த அன்பும் அக்கறையும் காட்டியிருக்கும் ‘இரக்கமுள்ள வெளிநாட்டவர்’ (Compassionate Foreigner) ஆகிய பிரிவுகளின் கீழ் தனிநபர்கள் விருது வழங்கி அங்கீகரிக்கப்படுவர்.

வரும் ஜூன் மாதம் 15ஆம் தேதி வரை விருதுகளுக்கு முன்மொழியலாம். விருது நிகழ்ச்சி செப்டம்பர் 27ஆம் தேதி ‌ஷங்கிரி-லா ஹோட்டலில் நடைபெறும்.

https://sgsilentheroes.com/online-nomination இணைய முகவரியில் பொதுமக்கள் முன்மொழியலாம்.

குறிப்புச் சொற்கள்