தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘அறியப்படாத’ நாயகர்களுக்கு விருது

2 mins read
d0c38b8b-5a6d-41f3-ad4f-26db09c40a86
குடிமக்கள் சங்கத் தலைவர் எம் பி செல்வம் (இடது), பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா (வலமிருந்து 3வது), சிங்கப்பூர் ‘அறியப்படாத நாயகர்கள்' விருதுகள் அமைப்பின் தலைவர் ஆல்வின் செள (வலது) ஆகியோருடன் விருது வென்ற ஐவர். - படம்: லாவண்யா வீரராகவன்
multi-img1 of 2

சமூக முன்னேற்றத்துக்குத் தங்கள் வழியில் பங்களித்தோரைச் சிறப்பிப்பதுடன் இளைய தலைமுறையினரிடம் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் விருதுகளும் வழங்கப்படுவது சிறப்பானது என்று பிரதமர் அலுவலக அமைச்சரும், நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.

குடிமக்கள் சங்கத்தின் 12வது ‘அறியப்படாத நாயகர்கள்’ விருது விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசிய அவர், “கருணையுடன் செயல்படுவது வயதைப் பொறுத்ததன்று. நமது எதிர்காலம், அக்கறை கொண்ட, மீள்திறன்மிக்க உள்ளங்களின் கைகளில் உள்ளதை விருது வென்ற இளையர்கள் நமக்கு நினைவூட்டுகிறார்கள்,” என்று கூறினார்.

இவ்விருது விழாவின் முதலாம் ஆண்டில் பங்கேற்றதை நினைவுகூர்ந்த அமைச்சர், மீண்டும் இவ்விழாவில் நிற்பது முழுமையான உணர்வளிப்பதாகவும் சொன்னார்.

ஷங்ரிலா ஹோட்டல் அரங்கில் சனிக்கிழமை (செப்டம்பர் 27) நடைபெற்ற இவ்விருது நிகழ்ச்சியில் வெவ்வேறு வகையில் சமூகப் பணியாற்றிய ஐவருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

மொத்தம் 124 பேர் பரிந்துரைக்கப்பட்டு, 24 பேர் இறுதிச்சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், மனிதநேய நெஞ்சம், முன்மாதிரி இளையர், தலைசிறந்த பெரியவர், உறுதியளிக்கும் முன்னோடி, அன்பான வெளிநாட்டவர் ஆகிய ஐந்து பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும், தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்கள் 84 பேரிலிருந்து உச்ச (APEX) விருது வென்ற ஐந்து மாணவர்களும் விழாவில் அங்கீகரிக்கப்பட்டனர்.

“அண்மையில் தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் லாரன்ஸ் வோங் குறிப்பிட்ட ‘நாம் முதல்’ (We First) எனும் கலாசாரத்தையே வாழ்வியலாக ஏற்றுக்கொண்டோருக்கு விருதளித்து சிறப்பிப்பதில் பெருமை,” என்றார் குடிமக்கள் சங்கத் தலைவரும் சிங்கப்பூர் அறியப்படாத நாயகர்கள் இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான எம்.பி.செல்வம்.

எந்தவித எதிர்பார்ப்புமின்றி செய்த நற்செயல்களைத் தொடர்ந்து செய்யும் தனிமனிதர்களை அங்கீகரித்து, ‘நாம் முதல்’ எனும் இக்கலாசாரத்தை ஊக்குவிப்பதற்குப் பங்களிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைவதாகவும் திரு செல்வம் கூறினார்.

தனிப்பட்ட வாழ்வில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வளர்ந்தாலும் அடுத்தவர்களுக்கு உதவுவதே சரியான வாழ்வியல் முறை என நம்புகிறார் தலைசிறந்த பெரியவர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட சுபா‌ஷ் சாமிநாதன், 51.

“இறுதி மூச்சுவரை இயன்ற அளவு சமூகப்பணி மேற்கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை. விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டதில் மகிழ்ச்சி,” என்றார் அவர்.

முன்மாதிரி இளையர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட செல்வா ராஜு ஆறுமுகம், 33, “தாய் தந்தையரை இழந்து தனிமையில் வாடிய நான் பிறருக்கு உதவுவதன்மூலம் மனநிறைவு அடைகிறேன்,” என்றார். விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது ஊக்கமளிப்பதாகச் சொன்ன அவர், சிறப்புத் தேவையுடைய இளையரின் முன்னேற்றத்துக்கும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்துக்கும் தாம் சேவையாற்ற விரும்புவதாகவும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்