திறனாளர்களை ஈர்க்கும், வளர்க்கும் மற்றும் தக்கவைத்துக்கொள்ளும் ஆற்றலுக்காக, சிங்கப்பூர் உலகப் பொருளாதார தரவரிசையில் ஐந்து இடங்கள் சரிந்து ஏழாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
பட்டியலில் ஆசியாவின் சிறந்த செயல்திறன் கொண்ட நாடு என்ற சிறப்பையும் சிங்கப்பூர் ஹாங்காங்கிடம் இழந்தது. ஹாங்காங் ஐந்து இடங்கள் முன்னேறி நான்காவது இடத்தைப் பிடித்தது. சுவிட்சர்லாந்து தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது. அதைத் தொடர்ந்து லக்சம்பர்க், ஐஸ்லாந்து ஆகியவை உள்ளன.
இந்தத் தரவரிசை, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த அனைத்துலக நிர்வாக மேம்பாட்டு நிறுவனத்தின் (ஐஎம்டி) உலகப் போட்டித்திறன் மையத்தால் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) வெளியிடப்பட்டது.
அதில் 6,162 நிர்வாகிகளிடமிருந்து புள்ளிவிவரத் தரவையும் கணக்கெடுப்பு பதில்களையும் பயன்படுத்தி ஒவ்வொரு பொருளியலையும் மதிப்பீடு செய்தது. அதில் முதலீடு மற்றும் மேம்பாடு, ஈர்ப்பு, தயார்நிலை ஆகிய மூன்று அம்சங்கள் மதிப்பிடப்பட்டன.
முதலீடு மற்றும் மேம்பாடு எனும் அம்சத்தில் சிங்கப்பூரிடம் மிகக் கடுமையான சரிவு ஏற்பட்டது. அங்கு அது 2024ல் 22வது இடத்திலிருந்து 30வது இடத்திற்குச் சரிந்தது. இந்த அம்சம் பொதுக் கல்விச் செலவு, மாணவர்-ஆசிரியர் விகிதங்கள், பயிற்சிகளைச் செயல்படுத்துதல் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டிருந்தது.
கல்விக்கான பொதுச் செலவு சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 2.1 விழுக்காடாக இருந்தது. அந்தக் குறியீட்டில் அது 63வது இடத்தைப் பிடித்தது.
மற்றொரு பலவீனம், கவர்ச்சிகரமான ஈர்ப்பு அம்சத்தின் கீழ், அதிக வாழ்க்கைச் செலவு ஆகும். அதில் சிங்கப்பூர் 65வது இடத்தைப் பிடித்தது.
இருப்பினும், சிங்கப்பூர் தொடர்ந்து தயார்நிலையில் வலுவாகச் செயல்பட்டு, இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி முறை மூலம் பெறப்பட்ட திறன்களை உயர்வாக மதிப்பிட்டு, போட்டி நிறைந்த பொருளாதாரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக ஆய்வில் பங்கேற்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.
“சிங்கப்பூரில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு திறனாளர்கள் அங்கு தொடர்ந்து தங்குவதைக் கடினமாக்கியுள்ளது,” என்று திங்கட்கிழமை (செப்டம்பர் 8) ஒரு செய்தியாளர் கூட்டத்தில், ஐஎம்டி உலகப் போட்டி மைய இயக்குநர் ஆர்டுரோ பிரிஸ் தெரிவித்தார்.

