புவிசார் அரசியல் மாற்றங்களுக்கும் பொருளியல் மாற்றங்களுக்கும் இடையே சிங்கப்பூர் அதன் உள்நாட்டு முன்னுரிமைகளுக்கு அப்பால் கவனம் செலுத்தவேண்டும் என்று நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங் கூறியுள்ளார்.
இந்த ஆண்டுக்கான (2025) அரசாங்கம் மற்றும் அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்டங்கள் மீது ஒன்பது நாள்களாக நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தை நிறைவுசெய்து திங்கட்கிழமை (மார்ச் 10) அவர் உரையாற்றினார்.
“வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு என எதில் உலகளாவிய தடை ஏற்பட்டாலும் அது குறிப்பிடத்தக்க வகையில் சிங்கப்பூரையும் பாதிக்கும்,” என்றார் அவர்.
மற்றெந்த நாட்டையும் போலவே, கணிக்க முடியாத தன்மை, நிலையற்ற தன்மை ஆகியவற்றை எதிர்கொள்ள சிங்கப்பூர் தயாராக இருக்கவேண்டும் என்றார் திரு சியா.
சிங்கப்பூர் சிறிய நாடு என்றபோதும் அதன் வலிமைக்குக் குறைவில்லை என்றார் அவர்.
“உலகில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்துவரும் வேளையில், நமது பொருளியல் வலிமை, வளங்கள், வலுவான தற்காப்பு, மக்களின் ஒற்றுமை ஆகியவை நமக்குச் சாதகமான அம்சங்கள்,” என்று திரு சியா கூறினார்.
அறுபது ஆண்டுகளுக்குமுன் குறைவான ஆதாயங்களே கொண்டிருந்த சிங்கப்பூர் இப்போது வலுவான நிலையிலிருப்பதை அவர் சுட்டினார்.
“தற்போது நமது நிலை வலுவாக இருக்கிறது. அதை அறிவுபூர்வமாகவும் கவனமாகவும் பயன்படுத்த வேண்டும். அத்துடன், எப்போதும் தேசிய நலன்களைப் பாதுகாக்க வேண்டும்,” என்று திரு சியா கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மாற்றத்துக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளுதல், பொருத்தமாக விளங்குதல், நிச்சயமற்ற சூழல்களைத் தெளிவுடனும் துணிச்சலுடனும் கடந்து செல்லுதல் ஆகியவற்றுக்கான செயல்திறன், கடந்த 60 ஆண்டுகளாகவே சிங்கப்பூரின் வலிமையாகத் திகழ்வதாக அவர் கூறினார்.
சிங்கப்பூர் வளர்ச்சிப் பாதையில் எடுத்து வைத்த ஒவ்வோர் அடியிலும் கடின உழைப்பு, தியாகம், ஆழமான கடமை உணர்வு ஆகியவற்றின் மூலம் முன்னேற்றம் சாத்தியமானது என்று திரு சியா குறிப்பிட்டார்.