தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தோனீசியாவிலிருந்து ஐந்தாண்டுகளில் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி இறக்குமதி

2 mins read
50ef9139-e5bd-4187-af0c-fe438b0ec2af
2035ஆம் ஆண்டுக்குள் 4 கிகாவாட் வரை மின்சாரம் இறக்குமதி செய்யும் இலக்கில் முக்கால்பகுதியை சிங்கப்பூர் எட்டிவிட்டது.  - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜகார்த்தா: சிங்கப்பூர் இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்தோனீசியாவிலிருந்து 2 கிகாவாட் அளவுக்குப் புதுப்பிக்கத்தக்க மின்சக்தியை இறக்குமதி செய்யத் தொடங்கக்கூடும்.

இதுவே, கரியமிலவாயு குறைவான மின்சாரத்தின் இறக்குமதிக்காக சிங்கப்பூர் மேற்கொள்ளும் ஆகப்பெரிய முயற்சியாக இருக்கும்.

சிங்கப்பூருக்கு ஓராண்டில் தேவைப்படும் மின்சாரத்தில் ஏறத்தாழ 15 விழுக்காடு இந்த இறக்குமதி மூலம் கிடைக்கும்.

ஏற்கெனவே கம்போடியாவிலிருந்து ஆண்டுக்கு ஒரு கிகாவாட் மின்சாரம் இறக்குமதி செய்ய நிபந்தனைக்குட்பட்ட அனுமதி வழங்கப்பட்டிருப்பதால், 2035ஆம் ஆண்டுக்குள் 4 கிகாவாட் வரை மின்சாரம் இறக்குமதி செய்யும் இலக்கில் முக்கால்பகுதியை சிங்கப்பூர் எட்டிவிட்டது.

இந்தோனீசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 2 கிகாவாட் மின்சாரம் இறக்குமதி செய்ய ஐந்து நிறுவனங்களுக்கு நிபந்தனைக்குட்பட்ட அனுமதி வழங்கியிருப்பதாக எரிசக்திச் சந்தை ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

பசிபிக் மெட்கோ சோலார், அடாரோ சோலார் இன்டர்நே‌ஷனல், இடிபி ரினியூவபல்ஸ் APAC, வெண்டா RE, கெப்பல் எனர்ஜி ஆகியவை அந்த ஐந்து நிறுவனங்கள்.

சிங்கப்பூரின் தூய்மையான மின்சக்தி இலட்சியத்திற்கு இது ஒரு ‘சீரிய தருணம்’ என்று வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் வெள்ளிக்கிழமை கூறினார்.

“முன்னதாக இவ்வாண்டு உறுதி எடுத்ததற்கிணங்க, 2035க்குள் நான்கு கிகாவாட் கரியமிலவாயு குறைவான மின்சக்தியை இறக்குமதி செய்யும் இலக்கை நாம் அடைவோம் என்று சிங்கப்பூரர்கள் நம்பலாம்,” என்றார் அவர்.

ஜகார்த்தாவில் நடைபெறும் இந்தோனீசிய நீடித்த நிலைத்தன்மை மாநாட்டின் ஒரு பகுதியாக, இந்தோனீசிய எரிசக்தி, தாதுவள அமைச்சர் அரிஃபின் தஸ்ரிஃப்பும் டாக்டர் டானும் வெள்ளிக்கிழமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

“அனைத்துலகக் கூட்டு முனைப்புகளின்மூலம், நாங்கள் கூட்டாகத் திட்டமிட்டு, மின்சக்தி நிலைமாற்றத்தைச் செயல்படுத்தி, பகிரப்படும் மின்சக்தி எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்லமுடியும்,” என்று டாக்டர் டான் கூறினார்.

மின்சார இறக்குமதிப் பணியை மேற்கொள்ளும் ஐந்து நிறுவனங்களும், கடலடியில் மின்கம்பிகளை அமைக்கும் பாதையை உறுதிசெய்ய கடல் ஆய்வுகளை நடத்தி, சாதனங்களின் உற்பத்திக்கும் ஆதரவளிக்கும்.

குறிப்புச் சொற்கள்