கம்போடியச் செல்வந்தர் சென் ஸி மற்றும் அவருடைய கூட்டாளிகள்மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டுவதற்கு முன்னரே சிங்கப்பூர் காவல்துறை அவர் குறித்து விசாரணையைத் தொடங்கிவிட்டது என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்தார்.
இந்தத் தகவலைப் புதன்கிழமை (நவம்பர் 5) நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் அமைச்சர் சீ வெளியிட்டார்.
சீனாவில் பிறந்த 38 வயது சென்மீது கடந்த மாதம் 8ஆம் தேதி அமெரிக்கா மோசடி குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியது, கம்போடியாவில் உள்ள மோசடி நிலையங்களில் வலுக்கட்டாயமாக ஆள்களை வேலைக்குச் சேர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கையில் சென் ஈடுபட்டதாக அமெரிக்கா கூறுகிறது.
பிரிட்டனும் சென்மீதும் அவரது பிரின்ஸ் நிறுவனம்மீதும் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளது.
சென் தற்போது தலைமறைவாக உள்ளார். அவர் சிங்கப்பூரில் இல்லை என்பதை சிங்கப்பூர் காவல்துறை உறுதிசெய்துள்ளது.
இந்நிலையில், சென்னுக்கு எதிராக சிங்கப்பூர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் துணைத் தலைவராகவும் உள்ள திரு சீ அதுகுறித்து விளக்கினார்.
“சென்னுக்குத் தொடர்புடைய இரண்டு குடும்ப அலுவலகங்கள் சிங்கப்பூரில் உள்ளன. அந்த நிறுவனம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு வரிச் சலுகை வழங்கப்பட்டிருந்தது. சென்னிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதால் அந்த நிறுவனங்களின் சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன,” என்றார் அமைச்சர் சீ.
தொடர்புடைய செய்திகள்
“சிங்கப்பூரில் குடும்ப அலுவலகங்கள் செயல்படுவதற்கு கடுமையான நிதி விதிமுறைகள் உள்ளன. இருப்பினும், ஒரு சில முறை தவறாகச் சிலருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. அதற்காக ஒட்டுமொத்தமாக குடும்ப அலுவலக நிதிக் கட்டமைப்பை முடக்கிவிட முடியாது,” என்று அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் சென்னுக்குத் தொடர்புடைய 150 மில்லியன் வெள்ளி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. தற்போது விசாரணை நடந்து வருவதால் மேல்விவரங்களை வெளியிடமுடியாது என்று அமைச்சர் சீ தெரிவித்தார்.

