4,700 புள்ளிகளைக் கடந்து புதிய உச்சம் தொட்ட ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு

2 mins read
245f6ff8-4d99-4578-9c9f-8b53831adbda
செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6) பங்கு வணிக நடவடிக்கைகள் தொடங்கியதும் எஸ்டிஐ 1.27 விழுக்காடு அல்லது 59.47 புள்ளிகள் அதிகரித்து 4,739.97 புள்ளிகளை எட்டியது. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு (எஸ்டிஐ) முதன்முறையாக 4,700 புள்ளிகளைக் கடந்து வரலாறு படைத்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6) இந்தப் புதிய மைல்கல்லை எட்டியது எஸ்டிஐ.

முதலீட்டாளர்கள் புவிசார் அரசியல் அபாயங்களைப் புறக்கணித்து, ‘வால் ஸ்திரீட் ஜர்னல்’ நாளேட்டின் கணிப்பைப் பின்பற்றுகின்றனர் எனவும் 2026ல் இந்தக் குறியீடு 5,000 புள்ளிகளை எட்டும் என்றும் கூறிய ஆய்வாளர்கள், ‘இது அடையக்கூடிய இலக்கு’ என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

பங்குச் சந்தையை ஊக்குவிக்க அரசாங்கம் எடுத்துள்ள ஆதரவு நடவடிக்கைகள், வட்டி விகிதங்கள் குறைந்து வருவது போன்றவை இந்த வளர்ச்சிக்கு வித்திட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை பங்கு வணிக நடவடிக்கைகள் தொடங்கியதும் எஸ்டிஐ குறியீடு, 1.27 விழுக்காடு அதாவது 59.47 புள்ளிகள் அதிகரித்து 4,739.97 புள்ளிகளை எட்டியது. 

அதில் $1.78 பில்லியன் மதிப்பிலான 1.71 பில்லியன் பங்கு பத்திரங்கள் சார்ந்த வர்த்தகங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக ஓசிபிசி பங்கு விலை புதிய உச்சத்தை எட்டி, முதல்முறையாக $20 என்ற அளவைக் கடந்து $20.18 எனும் அளவில் நிறைவடைந்தது. அதேவேளையில், டிபிஎஸ் பங்கு விலை $57.93 என்ற நிலைக்கு உயர்ந்து ஒரு புதிய மைல்கல்லைத் தொட்டது.

இதற்கு முன்பு கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் எஸ்டிஐ 3,991 என ஏற்றம் கண்டதே முன்னைய உச்சநிலை.

இதற்கிடையே, ஓசிபிசி வங்கியின் முன்னணி வாடிக்கையாளர்கள் பங்குபெற்ற வருடாந்தர முதலீட்டுக் கருத்தரங்கில், ஓசிபிசி குழும உலகளாவிய சந்தைகளின் பங்கு ஆய்வுப் பிரிவுத் தலைவர் கார்மென் லீ இதுகுறித்து உரையாற்றினார்.

ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், “முதலீட்டாளர்கள் ஒருபோதும் சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையைப் புறக்கணிக்க முடியாது,” என்று கூறினார்.

மேலும், “இந்த வட்டாரத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் பலர் சிங்கப்பூர்ப் பங்குகளில் முதலீடு செய்கிறார்கள். சில சிறிய, நடுத்தர நிறுவனங்கள் 2025ல் மிகச் சிறப்பாகச் செயல்பட்டன. இந்த ஆண்டு இத்தகைய நிறுவனங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும்,” என்று திருவாட்டி லீ தெரிவித்தார்.

பங்குச் சந்தை மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட $3.95 பில்லியன் நிதி, உள்ளூர்ப் பங்குகளை வலுவாக்கியது.

இந்நிலையில், செல்வ மேலாண்மை வளர்ச்சியுடன் வங்கித் துறை, நிலையான வருவாயைப் பேணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதேநேரத்தில் சொத்துச் சந்தை, போக்குவரத்து, சுகாதாரப் பாதுகாப்புத் துறைகளும் இரட்டை இலக்க வளர்ச்சி காணக்கூடும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்