சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக்கழக மாணவர்கள் உருவாக்கிய ‘ஜியோடுகெதர்’ எனும் செயலி, ‘டெல் டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தின் ‘இன்னொவேட்ஃபெஸ்ட்’ போட்டியில் பரிசு கிடைத்துள்ளது.
செப்டம்பர் 26ஆம் தேதி நடைபெற்ற இப்போட்டியில் சிங்கப்பூரின் பலதுறைத் தொழிற்கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பத்துக் குழுக்கள் பங்கேற்றன.
இரண்டாவது ஆண்டாக நடத்தப்படும் இப்போட்டி, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சமூக விவகாரங்களுக்குத் தீர்வுகாண இளையர்களை ஊக்குவிக்கிறது.
‘மைண்ட்ஸ் அண்ட் லயன்ஸ் பிஃபிரண்டர்ஸ்’ சேவை அமைப்புடன் இணைந்து முதியோர்களும் உடற்குறையுள்ளோரும் எதிர்கொள்ளும் சமூகத் தனிமைக்குத் தீர்வுகாண உதவுவது இப்போட்டியின் நோக்கம்.
பரிசு பெற்ற ‘ஜியோடுகெதர்’ செயலி, துடிப்புடன் முதுமையடைதலுக்கான நிலையங்களும் சமூக மன்றங்களும் தங்கள் வீடுகளுக்கு அருகே ஏற்பாடு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடவும் தொண்டூழியம் செய்யவும் முதியோருக்கு உதவும்.
‘ஜியோடுகெதர்’ செயலியை சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ‘டீம் 343’ குழு உருவாக்கியது. பலதுறைத் தொழிற்கல்லூரிப் பிரிவில் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களின் ‘டீம் ஸ்னூப்பி’ குழு வெற்றிபெற்றது.
சுகாதார அமைச்சர் ஓங் யி காங், வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.
இரு குழுக்களுக்கும் தலா $10,000 பரிசாக வழங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
மின்னிலக்கத் தீர்வுகளை அறிமுகப்படுத்துமுன் முதியோருடன் நேரில் கலந்துபழகுதல், அவர்கள் மீதான பரிவு ஆகியவற்றின் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார். முதியோர் துடிப்புடன் விளங்க, மின்னிலக்க வழிமுறைகளோடு இத்தகைய நேரடித் தொடர்பு நடவடிக்கைகளையும் இணைத்துச் சமூகம் வழங்கவேண்டும் என்றார் அவர்.