நிகழும் சாத்தியம் மிகக் குறைவு என்ற போதிலும் ஒருவேளை அவை நடந்தால் ஏற்படும் மிக மோசமான சூழல்களால் கடல்மட்ட உயர்வு தொடர்பான முன்னுரைப்புகள் எவ்வாறு பாதிப்படையும் என்பது குறித்து சிங்கப்பூரைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வு நடத்த இருக்கின்றனர்.
உதாரணத்துக்கு, வடதுருவம் அல்லது தென்துருவத்தில் உள்ள மிகப் பெரிய பனிப்பாறைகள் கரைந்து இடிந்து விழுந்தால் கடல்மட்டத்துக்கு மிக அருகில், தாழ்வான பகுதிகளில் உள்ள சிங்கப்பூர் போன்ற நாடுகள் எவ்வாறு பாதிப்படையும் என்று ஆராயப்படும்.
கடல்மட்ட உயர்வு தொடர்பான முன்னுரைப்பை ஆய்வு செய்து புதுப்பிக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கடல்மட்டம் 2100ஆம் ஆண்டுக்குள் 1.15 மீட்டர் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நினைத்துப் பார்க்காத பாதிப்புகள் ஏற்பட்டால் இதற்கு முன்பு முன்வைக்கப்பட்ட முன்னுரைப்புகளைவிட கடல்மட்டம் உயரக்கூடும் என்று தேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு) நடத்திய ஆய்வு காட்டிய பிறகு இந்தப் புதிய ஆய்வு நடத்தப்பட இருக்கிறது.
என்டியுவின் அந்த ஆய்வு அறிக்கை 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது.
முந்தைய முன்னுரைப்புகளைவிட கடல்மட்டம் 90 சென்டிமீட்டர் உயரக்கூடும் என்று ஆய்வு கூறுகிறது.
சிங்கப்பூர் மற்றும் வட்டார நாடுகளைச் சுற்றியுள்ள கடல்மட்ட உயர்வு தொடர்பான ஆய்வை என்டியுவுடன் இணைந்து சிங்கப்பூர் பருவநிலை ஆய்வு மையம் நடத்த இருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்த மையம் சிங்கப்பூர் வானிலை மையத்தின்கீழ் செயல்படுகிறது.
புதிய ஆய்வின்மூலம் கிடைக்கும் கண்டுபிடிப்புகள் பல்வேறு திட்டமிடுதல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று மையத்தைச் சேர்ந்த ஆய்வு விஞ்ஞானி டிரினா இங் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் விமான நிலையம், துறைமுகங்கள் ஆகிய முக்கிய உள்கட்டமைப்புகள் தொடர்பாக திட்டமிடுவதற்கு இது மிகவும் முக்கியம் என்று தெரிவிக்கப்பட்டது.
கடலோரப் பகுதியில் கட்டப்படும் சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாம் முனையம், துவாஸ் துறைமுகம் ஆகியவை இதில் அடங்கும்.