சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தில் மூன்று அனைத்துலக நீதிபதிகள் இடம்பெற உள்னர்.
பிரிட்டன் நீதிபதி மேரி ஹாவர்த் ஆர்டன், ஆஸ்திரேலிய நீதிபதிகளான ஆண்டனி ஜேம்ஸ் பெசாங்கோ, ஆண்டனி ஜான் மீகர் ஆகியோர் அதிபர் தர்மன் சண்முகரத்தினத்தால் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) தெரிவித்துள்ளது.
வரும் 2025 ஜனவரி 5ஆம் தேதி முதல் 2027 ஜனவரி 4ஆம் தேதி வரை, ஈராண்டு காலத்திற்கு அவர்கள் பணியாற்றுவர்.
இங்கிலாந்து மற்றும் வேல்சின் உயர் நீதிமன்ற நீதிபதி 1993ல் நீதிபதி ஆர்டன் நியமிக்கப்பட்டார். 1996 முதல் 1999 வரை இங்கிலாந்து மற்றும் வேல்சின் சட்ட ஆணைக்குழு தலைவராகப் பணியாற்றினார். 2000 முதல் 2018 வரை மேல்முறையீட்டு நீதிமன்றம், அனைத்துலக நீதித்துறை உறவுகள் ஆகியவற்றிலும் இடம்பெற்றிருந்த நீதிபதி ஆர்டன், 2022ல் ஓய்வுபெறும்வரை பிரிட்டிஷ் உச்ச நீ்திமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார்.
நீதிபதி பெசாங்கோ 2006ல் ஆஸ்திரேலிய கூட்டரசு நீதிமன்றத்தின் நீதிபதியாகும் முன் 2001ல் தெற்கு ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். 2007க்கும் 2024க்கு இடையில், ஆஸ்திரேலிய தலைநகர் பகுதியின் உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும் 2015 முதல் 2024 வரை நார்போக் தீவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார்.
நியூ சவுத் வேல்ஸிற்கான மூத்த வழக்கறிஞராக 1995ல் நியமிக்கப்பட்ட நீதிபதி ஆண்டனி ஜான் மீகர், 2011ல் நியூ சவுத் வேல்ஸின் உச்ச நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியானார். 2024 ஆகஸ்ட்டில் ஓய்வு பெற்றபோது, மேல்முறையீட்டு நீதிமன்ற மூத்த நீதிபதியாகவும் குற்றவியல் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்தார்.
இந்த நியமனங்களுடன் உச்ச நீதிமன்றம் 35 நீதிபதிகளையும் (தலைமை நீதிபதி, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள், மேல்முறையீட்டு தனிப் பிரிவின் நான்கு நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தின் 18 நீதிபதிகள், நான்கு நீதித்துறை ஆணையர்கள், ஐந்து மூத்த நீதிபதிகள் ஆகியோரை உள்ளடக்கி) 24 அனைத்துலக நீதிபதிகளையும் கொண்டிருக்கும்.

