தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர்-சுவீடன்: நியாயமான விதிமுறைகளின் அடிப்படையிலான உலக ஒழுங்குமுறை மீது கடப்பாடு

2 mins read
26a6fa70-a678-4a4f-bd5f-c22ba4dd54d4
ராஃபிள்ஸ் ஹோட்டலில் நவம்பர் 19ஆம் தேதி சுவீடன் மன்னரின் பெயர் சூட்டப்பட்ட ஆர்க்கிட் மலருக்கு அருகில் (இடமிருந்து) அதிபரின் மனைவி திருவாட்டி ஜேன் இத்தோகி சண்முகரத்னம், அதிபர் தர்மன் சண்முகரத்னம், சுவீடன் மன்னர் கார்ல் பதினாறாம் குஸ்டஃப். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

நியாயமான விதிமுறைகளின் அடிப்படையிலான உலக ஒழுங்குமுறை தொடர்பில் சிங்கப்பூரும் சுவீடனும் கொண்டுள்ள கடப்பாடு முன்னெப்போதையும்விட முக்கியத்துவம் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துலகச் சவால்களை எதிர்கொள்வதில் சுவீடன் எப்போதுமே மிக அதிகப் பங்களிப்பை வழங்கிவருவதாக அதிபர் தர்மன் சண்முகரத்னம், நவம்பர் 19ஆம் தேதி கூறினார்.

அதிபரும் அவரது மனைவி திருவாட்டி ஜேன் இத்தோகி சண்முகரத்னமும் சுவீடன் மன்னர் கார்ல் பதினாறாம் குஸ்டஃப்புக்கு அளித்த அரசாங்க விருந்துபசரிப்பின்போது அதிபர் அவ்வாறு கூறினார்.

ராஃபிள்ஸ் ஹோட்டலில் அந்த விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

சுவீடன் மன்னர் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் வந்துள்ளார். நவம்பர் 21ஆம் தேதி வரை அவர் இங்குப் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார்.

சிங்கப்பூரும் சுவீடனும் தற்காப்பு, கல்வி, கலாசாரம் எனப் பல துறைகளில் பங்காளித்துவம் வகிப்பதையும் இரு நாடுகளுக்கும் இடையே வலுவான பொருளியல் பிணைப்புகள் இருப்பதையும் அதிபர் சுட்டினார்.

சுவீடன் மன்னரின் சிங்கப்பூர் வருகை இருதரப்புக்கும் இடையிலான நட்பார்ந்த, நீண்டகால உறவுகளை மறுஉறுதிப்படுத்துவதாகவும் புதிய துறைகளில் விரிவான ஒத்துழைப்புக்கு வித்திடுவதாகவும் அவர் சொன்னார்.

சுவீடன் மன்னர் குஸ்டஃப் தமது உரையில், சிங்கப்பூருக்கும் சுவீடனுக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளையும் அறிவியல், ஆய்வுத் துறைகளில் இரு நாடுகளும் கொண்டிருக்கும் கடப்பாட்டையும் குறிப்பிட்டார்.

முன்னதாக, சிங்கப்பூர் பூமலைக்கு அவர் சென்றிருந்தார். அங்கு அவரைக் கௌரவிக்கும் விதமாக ஓர் ஆர்க்கிட் மலருக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.

அதையடுத்து, மூத்த அமைச்சர் லீ சியன் லூங் சுவீடன் மன்னருக்கு மதிய உணவு விருந்தளித்தார்.

அனைத்துலக விவகாரங்கள் குறித்தும் ஒரே மாதிரியான சவால்கள் தொடர்பில் இரு நாடுகளும் பின்பற்றிய அணுகுமுறைகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியதாகத் திரு லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்