சிங்கப்பூரின் குழாய் நீர் குடிப்பதற்குப் பாதுகாப்பானது என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ உறுதியளித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாகச் சிங்கப்பூர் புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தக் காலகட்டத்தில் பெய்த மழையின் நீர் கருமையாக இருந்ததைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவின. இதனால் மக்கள் கவலை அடைந்தனர்.
இதையடுத்து அமைச்சர் நேரடியாக நீர்த் தரப் பரிசோதனைக்கூடத்திற்குச் சென்று ஆய்வு செய்தார்.
“சிங்கப்பூர்த் தண்ணீர் முகவையான பொதுப் பயனீட்டுக் கழகம் நடத்திய பரிசோதனைகளில், சுத்திகரிக்கப்பட்ட நீரின் தரத்தில் எந்த மாற்றமும் இல்லை,” என்று அமைச்சர் கிரேஸ் ஃபூ ஃபேஸ்புக் பக்கத்தில் காணொளி வாயிலாகத் தெரிவித்தார்.
காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 193 ஆக இருந்த அக்டோபர் 17ஆம் தேதி, மழைநீர் மாதிரிகளை அதிகாரிகள் சேகரித்தனர். குறியீடு 101 முதல் 200 வரை இருந்தால் அது ஆரோக்கியமற்ற காற்றைக் குறிக்கும்.
“புகைமூட்டத்தின் போது பெய்யும் மழைநீரில் அமிலத்தன்மை சற்று அதிகமாக இருக்கும். காற்றில் உள்ள துகள்களும் கரிமப் பொருள்களும் கலந்திருப்பதே நீர் கருமையாக இருப்பதற்குக் காரணம்,” என்று அமைச்சர் விளக்கினார்.
புகைமூட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மழைநீரைக் குடிப்பதற்கோ சமைப்பதற்கோ குளிப்பதற்கோ பயன்படுத்தக் கூடாது என அவர் வலியுறுத்தினார்.
அக்டோபர் 17ஆம் தேதி மழையின் கார அமில அளவு (pH level) 5.7 ஆக இருந்தது. மிதமான புகைமூட்ட மழையில் 6.6 ஆகவும், சாதாரண மழையில் 6.8 ஆகவும் அது பதிவானது. சுத்திகரிக்கப்பட்ட குழாய் நீரில் 7.8 ஆக உள்ளது.
கார அமில அளவு 7க்கு கீழ் இருந்தால் அதில் அதிக அளவில் அமிலம் இருக்கும்.
அதேபோல, நீரின் கலங்கல் தன்மையும் மழை நீரில் அதிகமாகவும் குழாய் நீரில் மிகக் குறைவாகவும் காணப்பட்டது.
“சிங்கப்பூர் நீர்த்தேக்கங்களில் உள்ள நீர் பல கட்டங்களாகச் சுத்திகரிக்கப்படுகிறது. புகைமூட்டத்தின் முக்கிய மாசு எனப்படும் பிஎம் 2.5 நுண்துகள்களைவிட 100 மடங்கு சிறிய துகள்களைக்கூட வடிகட்டும் திறன் நமது நீர் சுத்திகரிப்பு முறைக்கு உறுதியாக உண்டு,” என்று அமைச்சர் கிரேஸ் ஃபூ குறிப்பிட்டார்.
