தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உடற்குறையுள்ளோரை கூடுதலாகவேலையில் அமர்த்த திட்டம்

2 mins read
aa7d64b6-1e0e-4696-be2f-b3eada7ed2be
படம்: - udservices.org / இணையம்

சிங்கப்பூரில் வேலை செய்யும் உடற்குறையுள்ளோரின் விகிதத்தை 40 விழுக்காட்டுக்கு உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வகையில் 2030ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 4,500 உடற்குறையுள்ளோர் வேலையில் இருப்பர் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அந்த இலக்கை அடைவதற்காக செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தச் செயற்குழு திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 16) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பரிந்துரைகளை முன்வைத்தது.

அனைவரையும் உள்ளடக்கும் போக்கைக் கடைப்பிடிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, உடற்குறையுள்ளோருக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது, வேலைப் பயிற்றுவிப்பாளர்களின் திறன்களை வளர்ப்பது ஆகியவற்றுக்கான திட்டங்கள் பரிந்துரைகளில் அடங்கும்.

தற்போது 7,000 நிறுவனங்கள் அனைவரையும் உள்ளடக்கும் வகையில் ஊழியர்களை வேலைக்கு எடுக்கின்றன. அந்த எண்ணிக்கையை 2030க்குள் 10,000க்கு அதிகரிக்க அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளது.

அவற்றில் 30 விழுக்காட்டு நிறுவனங்களை, உடற்குறையுள்ளோர் ஒருவருக்கும் அதிகமானோரை வேலைக்கு எடுக்கச் செய்வது இலக்காகும்.

தற்போது அனைவரையும் உள்ளடக்கும் நிறுவனங்கள் ஐந்தில் நான்கு, ஒரு உடற்குறையுள்ள ஊழியரை மட்டுமே வேலைக்கு எடுக்கின்றன. அவர்களில் கூடுதலானோரை வேலைக்கு எடுப்பதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்படலாம் என்று செயற்குழு சுட்டியது.

தற்போது அனைவரையும் உள்ளடக்கும் 7,000 நிறுவனங்கள், சுமார் 16,000 உடற்குறையுள்ள ஊழியர்களை வேலையில் வைத்துள்ளன. இணையம்வழி மேற்கொள்ளப்படும் பணிகளை அடித்தளமாகப் பயன்படுத்தி சிறப்புத் தேவையுடையோரை ஊழியரணியில் சேர்த்துக்கொள்வது, வேலைப் பயிற்றுவிப்பாளர்களின் திறன்களை வளர்ப்பது உள்ளிட்ட பரிந்துரைகளை செயற்கு‌ழு முன்வைத்தது.

யூனோஸ் வட்டாரத்தில் உள்ள வாழ்நாள் கற்றல் நிலையத்தில் நடைபெற்ற உடற்குறையுள்ளோருக்கு உதவிக்கரம் நீட்டும் எனேபிலிங் அகடமி கழகத்தின் கற்றல் நிகழ்ச்சியில் (Enabling Academy Learning Festival) சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா, செயற்குழுவின் பரிந்துரைகளைப் பகிர்ந்துகொண்டார். அனைத்து பரிந்துரைகளையும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு ஆதரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்குறையுள்ள கூடுதலானோரை வேலையில் சேர்க்க பரிந்துரைகளை வரையும் செயற்குழு 2022ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. உடற்குறையுள்ளோருக்கான பெருந்திட்டம் 2030க்குக்கீழ் (Enabling Masterplan 2030) அந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுமக்கள், தனியார் மற்றும் அரசாங்கத் துறைகளைச் சேர்ந்த மொத்தம் 17 பேர் செயற்குழுவில் இடம்பெற்றனர்.

உடற்குறையுள்ளோருக்கான பெருந்திட்டம் 2030, உடற்குறையுள்ளோருக்கு ஆதரவளித்து சமூகத்துக்குப் பங்காற்றும் ஆற்றலை அவர்களிடையே வளர்ப்பதற்கான திட்டமாகும்.

2018/2019ஆம் ஆண்டுகளில், சிங்கப்பூர்வாசிகளில் 15லிருந்து 64 வயதுக்கு உட்பட்ட உடற்குறையுள்ளோரிடையே 28.2 விழுக்காட்டினர் வேலையில் இருந்தனர். 2022/2023ஆம் ஆண்டுகளில் அந்த விகிதம் 32.7 விழுக்காட்டுக்கு அதிகரித்தது.

குறிப்புச் சொற்கள்