மலேசிய அதிகாரிகளுக்குக் கையூட்டு கொடுத்த சிங்கப்பூர் டாக்சி ஓட்டுநர்கள் கைது

மலேசிய அதிகாரிகளுக்குக் கையூட்டு கொடுத்த சிங்கப்பூர் டாக்சி ஓட்டுநர்கள் கைது

2 mins read
05a901d0-c986-4ca0-8374-6c3d6b58974c
சாலை விதிகளை மீறிய டாக்சி ஓட்டுநர்கள் அதிகாரிகளுக்குக் கையூட்டு வழங்கியதாகக் கூறப்படுகிறது. - படம்: த பிசினஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

மலேசியாவின் அமலாக்க அதிகாரிகளுக்குக் கையூட்டு அளித்ததாகச் சந்தேகிக்கப்படும் எட்டு சிங்கப்பூர் டாக்சி ஓட்டுநர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

எல்லைத் தாண்டிய சேவை வழங்கும் டாக்சித் திட்டத்தின்கீழ் உள்ள அந்த ஓட்டுநர்கள் சாலை விதிமுறைகளை மீறிய குற்றம் தொடர்பில் மலேசிய அதிகாரிகளுக்குக் கையூட்டு வழங்கியதாக ஊழல் ஒழிப்பு விசாரணைப் பிரிவு தெரிவித்தது.

கைதான டாக்சி ஓட்டுநர்கள் 47லிருந்து 74 வயதுக்கு இடைப்பட்டவர்கள். அவர்கள் உட்லண்ட்சுக்கும் ஜோகூர் பாருக்கும் இடையிலான இணைப்புப் பாலத்தின் பேருந்துத் தடத்தில் டாக்சியை ஓட்டியதற்காக மலேசிய அதிகாரிகளால் பிடிபட்டதாகக் கூறப்படுகிறது.

கையூட்டு வழங்கியது தொடர்பில் அவர்கள் இம்மாதம் 30ஆம் தேதி கைதுசெய்யப்பட்டனர்.

ஊழல் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் கைதான ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாக ஊழல் ஒழிப்பு விசாரணைப் பிரிவு குறிப்பிட்டது.

ஊழலைச் சிங்கப்பூர் எள்ளளவும் சகித்துக்கொள்ளாது என்று பிரிவு நினைவூட்டியது.

ஊழல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்கமாட்டார்கள் என்று பிரிவு சுட்டியது.

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான எல்லைத் தாண்டிய சேவை வழங்கும் டாக்சித் திட்டத்தில் ஓட்டுநர்கள் மலேசியாவில் உள்ள குறிப்பிட்ட இடங்களில் பயணிகளை ஏற்றி இறக்கலாம்.

ஜோகூர் பாருவில் உள்ள லார்கின் சென்ட்ரல் முனையத்தில் சிங்கப்பூர் டாக்சிகளும் சிங்கப்பூரில் உள்ள பான் சான் ஸ்திரீட் முனையத்தில் மலேசிய டாக்சிகளும் பயணிகளை ஏற்றி இறக்கலாம்.

இதற்கிடையே, சிங்கப்பூர், மலேசியப் போக்குவரத்து அமைச்சுகள் கடந்த ஆண்டு டிசம்பரில் டாக்சிகள் பயணிகளை எங்குவேண்டுமானாலும் இறக்கிவிடலாம் என்ற தீர்மானத்தை அறிவித்தன.

ஆனால் எப்போது அந்தத் தீர்மானம் நடப்புக்குவரும் என்பதை அவை குறிப்பிடவில்லை.

சிங்கப்பூரும் மலேசியாவும் டாக்சிகளுக்கான உச்சவரம்பை 200லிருந்து 500க்குக் கட்டங்கட்டமாக உயர்த்தவிருக்கின்றன.

குறிப்புச் சொற்கள்
டாக்சிஓட்டுநர்கையூட்டுசிங்கப்பூர்மலேசியா