செயற்கை நுண்ணறிவைக் கொண்டு கற்பிப்பதில் சிங்கப்பூர் ஆசிரியர்கள் முன்னிலை வகிப்பதாக புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரில் உள்ள 75 விழுக்காட்டு ஆசிரியர்கள் செயற்கை நுண்ணறிவை வகுப்பறைகளில் பயன்படுத்துவதாகப் பொருளியல் ஒத்துழைப்பு, மேம்பாட்டு அமைப்பு (ஓஇசிடி) நடத்திய அனைத்துலகக் கற்றல், கற்பித்தல் ஆய்வு சுட்டியது.
அது பிற நாடுகளைவிட இரண்டு மடங்கு அதிகம் என்ற ஆய்வு, மற்ற நாடுகளின் ஆசிரியர்களில் 36 விழுக்காட்டினர் மட்டுமே கற்பித்தலில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டது.
சிங்கப்பூர் ஆசிரியர்கள் செயற்கை நுண்ணறிவால் பல பலன்களை அடைந்ததாகவும் கூறினர். கிட்டத்தட்ட 82 விழுக்காட்டினர் பாடங்களைத் திட்டமிடவும் வடிவமைக்கவும் செயற்கை நுண்ணறிவு பெரிய அளவில் கைகொடுத்ததாகக் கூறினர்.
ஏறக்குறைய 74 விழுக்காட்டினர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நிர்வாகப் பணிகளைச் செய்து முடிக்கலாம் என்றும் ஒப்புக்கொண்டனர்.
ஒட்டுமொத்தத்தில் சிங்கப்பூரில் உள்ள ஆசிரியர்கள் மின்னிலக்கத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முன்வருவதை ஆய்வு குறிக்கிறது. ஆனால், அதேவேளை செயற்கை நுண்ணறிவால் ஏற்படக்கூடிய பிழைகள் குறித்தும் ஆசிரியர்கள் அக்கறை தெரிவித்தனர்.
சிங்கப்பூரில் உள்ள 145 உயர்நிலைப் பள்ளிகளிலிருந்தும் 10 தனியார் உயர்நிலைப் பள்ளிகளிலிருந்தும் ஏறக்குறைய 3,500 ஆசிரியர்களும் பள்ளி முதல்வர்களும் கருத்தாய்வில் பங்கேற்றனர். கடந்த ஆண்டு ஏப்ரலிலிருந்து ஆகஸ்ட் வரை ஆய்வு நடத்தப்பட்டது.
ஒட்டுமொத்தமாக 55 கல்விக் கட்டமைப்புகளைச் சேர்ந்த 194,000 ஆசிரியர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் அந்த ஆய்வில் பங்கேற்பது இது மூன்றாவது முறை. இதற்குமுன் 2013, 2018ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூர் ஆய்வில் பங்கேற்றது.
செயற்கை நுண்ணறிவைக் கற்றலிலும் கற்பித்தலிலும் பயன்படுத்துவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதல் ஆய்வு இது.
குறிப்பிட்ட பாடங்கள் பற்றி அறிந்துகொள்ளவும் அவற்றின் சுருக்கத்தைப் பெறவும் 77 விழுக்காட்டு ஆசிரியர்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றனர்.
மாணவர்களிடமிருந்து கருத்துகளைத் திரட்டவும் அவர்களின் பெற்றோரிடம் உரையாடவும் கிட்டத்தட்ட 69 ஆசிரியர்கள் செயற்கை நுண்ணறிவை நாடுகின்றனர்.