தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மியன்மார் மீட்புப் பணியிலிருந்து நாடு திரும்பிய சிங்கப்பூர்க் குழு

2 mins read
0d05589c-03c2-4c0d-870f-450f105370ce
உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம், உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் இணைப் பேராசிரியர் முகமது ஃபைஷால் இப்ராஹிம் ஆகியோர், சாங்கி விமான நிலைய முனையம் மூன்று வருகை மண்டபத்தில் மியன்மாரிலிருந்து நாடு திரும்பிய சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மீட்புக் குழுவினரை ஏப்ரல் 8ஆம் தேதி வரவேற்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மீட்புப் பணிகளில் உதவிசெய்வதற்காகச் சிங்கப்பூரிலிருந்து மியன்மாருக்குச் சென்ற மீட்புப் பணியாளர்களும் பொறியாளர்களும் அடங்கிய குழு நாடு திரும்பியுள்ளது.

7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சென்ற மாதம் 28ஆம் தேதி அந்தக் குழு மியன்மார் சென்றது.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையிலிருந்து 80 பேர் கொண்ட ஆப்பரே‌‌ஷன் லயன்ஹார்ட் அணி உட்பட உள்துறை அமைச்சின் சீருடைப் பிரிவின்கீழ் உள்ள அறிவியல், தொழில்நுட்ப அமைப்பைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் சாங்கி விமான நிலையத்தின் மூன்றாம் முனையத்துக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) மாலை 4 மணியளவில் வந்தடைந்தனர்.

அவர்கள் அனைவரையும் உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகமும் உள்துறை துணையமைச்சர் ஃபை‌‌‌ஷால் இப்ராஹிமும் வரவேற்றனர்.

உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகமும் உள்துறை துணை அமைச்சர் ஃபைஷால் இப்ராஹிமும் 80க்கும் அதிகமான அதிகாரிகளைச் சாங்கி விமான நிலையத்தில் வரவேற்றனர்.
உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகமும் உள்துறை துணை அமைச்சர் ஃபைஷால் இப்ராஹிமும் 80க்கும் அதிகமான அதிகாரிகளைச் சாங்கி விமான நிலையத்தில் வரவேற்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மார்ச் 31ஆம் தேதி நோன்புப் பெருநாளுக்கு முன் மியன்மார் தலைநகர் நேப்பிடோவுக்குச் சென்ற சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் 48 முஸ்லிம் அதிகாரிகளின் குடும்பமும் விமான நிலையத்தில் திரண்டன.

மார்ச் 29ஆம் தேதி நேப்பிடா சென்ற சிங்கப்பூர் மீட்புப் பணியாளர்கள், கிட்டத்தட்ட 10 நாள்களாகத் தேடல், மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் அணியில் தலைசிறந்த பேரிடர் உதவி மீட்புக் குழு, முழுநேர தேசியச் சேவை மருத்துவர்கள், உதவி மருத்துவர்கள் போன்றோருடன் மோப்ப நாய்களும் மீட்புப் பணியில் உதவின.

சிங்கப்பூரிலிருந்து சென்ற அதிகாரிகள் கிட்டத்தட்ட 10 நாள்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
சிங்கப்பூரிலிருந்து சென்ற அதிகாரிகள் கிட்டத்தட்ட 10 நாள்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரிலிருந்து சென்று ஆறு நாள்கள் கழித்து தேடல், மீட்புப் பணிகள் நிறைவடைந்ததாக மியன்மார் சென்ற அணியின் தலைவர் கர்னல் டே சி வெய் தெரிவித்தார்.

“தேடல், மீட்புப் பணிகள் முடிவடைந்திருந்தாலும் நாங்கள் தொடர்ந்து எங்களால் முடிந்ததைச் செய்து இடிபாடுகளில் இருந்த உடல்களை மீட்க உதவினோம்,” என்றார் அவர்.

சிங்கப்பூரிலிருந்து சென்ற குழு மருத்துவ நிலையத்தையும் அமைத்து 130க்கும் அதிகமானோருக்குச் சிகிச்சையளித்தது.

இதர நாட்டிலிருந்து வந்த மருத்துவக் குழுக்களும் உதவின என்று கர்னல் டே குறிப்பிட்டார்.

மியன்மாரை உலுக்கிய நிலநடுக்கத்தில் 3,400க்கும் அதிகமானோர் மாண்டனர். கிட்டத்தட்ட 4,600 பேர் காயமுற்றனர்.

ஐக்கிய நாட்டு நிறுவனப் புள்ளிவிவரப்படி 17 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்