சிங்கப்பூர்- திமோர் லெஸ்டே பொருளியல் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்பந்தம்

சிங்கப்பூர்- திமோர் லெஸ்டே பொருளியல் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்பந்தம்

2 mins read
பிரதமர் லாரன்ஸ் வோங், ஸனானா குஸ்மாவோ முன்னிலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு
69f863b1-0ff6-4037-9746-5f17cfe10b30
திமோர் லெஸ்டேவுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் லாரன்ஸ் வோங், ஜூலை 3ஆம் தேதி திலி நகரில் உள்ள அந்நாட்டு அரசு மாளிகையில் திமோர் லெஸ்டே பிரதமர் ஸனானா குஸ்மாவோவைச் சந்தித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

திலி: சிங்கப்பூர், திமோர் லெஸ்டேவுக்கு இடையிலான பொருளியல் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) கையெழுத்தானது.

மேலும், சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளிலும் ஒத்துழைப்பு விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமோர் லெஸ்டே தலைநகர் திலியில் உள்ள அரசு மாளிகையில் நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பிற்கு முன்னதாக, பிரதமர் லாரன்ஸ் வோங், திமோர் லெஸ்டே பிரதமர் ஸனானா குஸ்மாவோ ஆகியோர் முன்னிலையில் இந்த உடன்படிக்கை கையெழுத்தாகிப் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

இந்தப் புதிய ஒப்பந்தம் இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சுகளும் வழக்கமான கலந்தாலோசனை முறையை உருவாக்க வழிவகுக்கும் எனச் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் வோங் தெரிவித்தார்.

இதன் மூலம் இருதரப்பு விவகாரங்கள் மட்டுமன்றி, வட்டார, அனைத்துலக, உத்திபூர்வ மேம்பாடுகள் குறித்தும் இருநாடுகளும் கலந்தாலோசிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திலியில் உள்ள அரசு மாளிகையில் நடந்த இருதரப்புச் சந்திப்பில் கலந்துகொண்ட சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், திமோர் லெஸ்டே பிரதமர் ஸனானா குஸ்மாவோ.
திலியில் உள்ள அரசு மாளிகையில் நடந்த இருதரப்புச் சந்திப்பில் கலந்துகொண்ட சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், திமோர் லெஸ்டே பிரதமர் ஸனானா குஸ்மாவோ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இரு அரசாங்கங்களுக்கும் இடையே நெருக்கமான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கான தளமாக இது அமையும் என்றார் அவர்.

சிங்கப்பூர் நம்பகமான பங்காளி எனத் தெரிவித்த திமோர் லெஸ்டே பிரதமர் குஸ்மாவோ, அந்நாட்டு நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் சிங்கப்பூர் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், ஆசியான் அமைப்பில் உறுப்பினராகும் பயணத்திலும் அது உதவியதாக அவர் கூறினார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

திமோர் லெஸ்டேவில் அதிக அளவில் முதலீடு செய்துள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று எனப் பிரதமர் வோங் கூறினார்.

மொத்த வர்த்தகம் முதல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வரையிலான பல்வேறு துறைகளில் உள்ள வாய்ப்புகளைச் சிங்கப்பூர் நிறுவனங்கள் ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இருதரப்பும் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் புதிய வர்த்தக வாய்ப்புகள், பொருளியல் பன்முகத்தன்மைக்கு ஆதரவு, இரு நாட்டு மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் நீடித்த வளர்ச்சி ஆகியவற்றை ஏற்படுத்த முடியும் என்றும் பிரதமர் வோங் விவரித்தார்.

2027ஆம் ஆண்டு முதல் திமோர் லெஸ்டே ஊழியர்களுக்குச் சிங்கப்பூரின் சில குறிப்பிட்ட துறைகளில் வாய்ப்பு வழங்கப்படும் எனப் பிரதமர் வோங் அறிவித்தார்.

இது திமோர் லெஸ்டே மக்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதோடு, இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தையும் மக்களிடையிலான தொடர்புகளையும் வலுப்படுத்தும் என்றார் அவர்.

முன்னதாக, திமோர் லெஸ்டேவின் தேசிய வளர்ச்சிக்குச் சிங்கப்பூர் ஆற்றிய பங்களிப்பு, ஆசியானில் அது உறுப்பினராவதற்கு வழங்கிய ஆதரவு ஆகியவற்றைப் பாராட்டி, பிரதமர் வோங்கிற்கு ‘ஆர்டர் ஆஃப் திமோர்-லெஸ்டே’ எனும் உயரிய விருதை வழங்கி அந்நாடு சிறப்பித்தது.

இந்த விருது பல ஆண்டுகளாகத் திமோர் லெஸ்டேவில் தங்கிப் பணியாற்றி, நிபுணத்துவ அறிவைப் பகிர்ந்து, அந்நாட்டு மக்களுடன் தோளோடு தோள் நின்று பணியாற்றிய சிங்கப்பூர்வாசிகள் அனைவருக்கும் உரித்தானது என நெகிழ்ச்சியுடன் பிரதமர் வோங் கூறினார்.

சிங்கப்பூர்வாசிகளை நட்புடனும் தாராள மனத்துடனும் கனிவுடனும் வரவேற்ற திமோர் லெஸ்டே மக்களுக்குச் சிங்கப்பூர் நன்றி தெரிவித்துகொள்வதாகப் பிரதமர் வோங் தமது உரையில் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
திமோர் லெஸ்டேலாரன்ஸ் வோங்பொருளியல்