ஆசியாவில் கருவூல மையங்களை அமைக்கும் நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் முதன்மைத் தேர்வு: ஆய்வு

ஆசியாவில் கருவூல மையங்களை அமைக்கும் நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் முதன்மைத் தேர்வு: ஆய்வு

1 mins read
76eca66b-1e0c-436c-987c-27a259b69c1e
சிங்கப்பூர், ஷாங்காய், ஹாங்காங் ஆகியவை முதன்மைத் தேர்வுகளாக உள்ளன. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

கருவூல மையங்களை வேறு இடங்களுக்கு மாற்ற முற்படும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் முதன்மைத் தேர்வாக விளங்குவதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

முக்கிய அந்நியச் செலாவணி வர்த்தக மையமாக இருப்பதும் கீழை, மேலை நாடுகளுக்கு இடையிலான நுழைவாயிலாக அதன் உத்திபூர்வ இருப்பிடம் இருப்பதும் சிங்கப்பூரின் ஈர்ப்புக்கு முக்கியக் காரணங்கள் என ஆய்வை நடத்திய டிபிஎஸ் வங்கி தெரிவித்தது.

ஆசிய பசிபிக், ஐரோப்பா, வடஅமெரிக்கா முழுவதும் உள்ள 15 சந்தைகளில் இயங்கும் நிறுவனங்களைச் சேர்ந்த 570 மூத்த நிர்வாகிகளிடம் அவ்வங்கி ஆய்வு மேற்கொண்டது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் ஏறக்குறைய 40 விழுக்காட்டினர், தங்களது கருவூல மையங்களை ஆசியாவுக்கு அல்லது ஆசியாவினுள் இடமாற்றம் செய்ய பரிசீலித்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சிங்கப்பூர், ஷாங்காய், ஹாங்காங் ஆகியவை முதன்மைத் தேர்வுகளாக உள்ளன.

ஓர் இடத்தைத் தேர்வு செய்வதில் அனைத்துலகச் சந்தைகளை அணுக முடிவது, ஒரு நிலையான அரசியல் சூழல், வணிகத்துக்கு உகந்த சூழல் உள்ளிட்ட அம்சங்களைப் பன்னாட்டு நிறுவனங்கள் கருத்தில் கொள்கின்றன.

அடுத்த ஈராண்டுகளில் தொழிலை பல்வகைப்படுத்துவதே தங்களுக்குத் தலையாய முன்னுரிமை என சிங்கப்பூரில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்கள் கூறியதை அறிக்கை சுட்டியது.

குறிப்புச் சொற்கள்