உள்ளூர் சுற்றுலாச் சேவைகளை வழங்கும் ஷீன் இயாவ் டிராவல் நிறுவனத்தின் உரிமத்தை சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் ரத்து செய்துள்ளது.
அந்நிறுவனம் தொடர்ந்து சில ஆண்டுகளாக அதன் நிதிநிலை குறித்து உண்மையற்ற விவரங்களை வழங்கியதாக சந்தேகம் எழுந்துள்ளது என்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) வெளியிட்ட அறிக்கையில் கழகம் தெரிவித்தது.
ஷீன் இயாவ் டிராவல் தற்போதைய வாடிக்கையாளர்கள் அனைவரிடத்திலும் வசூலிக்கப்பட்ட கட்டணங்களை அவர்களிடமே திருப்பித் தரவேண்டும். மேலும் செயல்படுத்தவேண்டிய சுற்றுலா சார்ந்த பணிகள் அனைத்தையும் மற்ற உரிமம் பெற்ற முகவர் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
பல ஆண்டுகளாகவே நிதி நிலை ஆவணங்களைப் போலியாகத் தயாரித்து சமர்ப்பித்ததற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளன என கழகம் தெரிவித்தது.
ஷீன் இயாவ் டிராவல் வழங்கிய ஆவணங்கள் உண்மையற்றவை என்பது மறுஆய்வு செய்தபோது தெரியவந்ததாகக் கழகம் கூறியது.
இத்தகைய குற்றங்களைச் செய்யும் நிறுவனங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்று அது குறிப்பிட்டது.
முறையற்ற வகையில் செயல்படும் பயண முகவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதில் கழகம் தயக்கம் காட்டாது எனவும் அது எச்சரித்தது.
குடியரசின் உரிமம் பெற்ற பயண முகவர்கள் பட்டியலை அறிந்துகொள்ள பொதுமக்கள் https://trust.stb.gov.sg/ என்ற அதன் இணையப் பக்கத்தைப் பார்வையிடலாம்.
