மின்சார கனரக வாகனங்களுக்கு மின்னூட்டு வசதிச் சோதனை

மின்சார கனரக வாகனங்களுக்கு மின்னூட்டு வசதிச் சோதனை

2 mins read
c09bded6-c2fe-4139-baca-435e9f585593
மின்சார வாகன மின்னூட்டு நிறுவனமான ‘பவர்-அப் டெக்’ புதிய சோதனைத் திட்டத்தில், அதிகபட்சமாகப் பத்து மின்சார கனரக வாகனங்களுக்கு மின்னூட்டு வசதிகளை வழங்கும். - படம்: ‘பவர்-அப் டெக்’

இவ்வாண்டின் இரண்டாம் பாதியில் மின்சார கனரக வாகனங்களுக்கு மின்கல மின்னூட்டம், மின்கல மாற்றம், நடமாடும் மின்னூட்ட வசதிகள் ஆகியவற்றுக்கான சோதனைத் திட்டத்தை சிங்கப்பூர் தொடங்கும்.

நிலப் போக்குவரத்து ஆணையம் ஜூன் 11ஆம் தேதி அதனைத் தெரிவித்தது.

“இந்தச் சோதனைத் திட்டங்களிலிருந்து கிடைக்கும் புரிதல் மூலம், அத்தகைய தொழில்நுட்பங்களின் தொழில்நுட்ப, செயல்பாட்டு, பாதுகாப்புத் தேவையை ஆணையம் புரிந்துகொள்ளலாம்.

“சிங்கப்பூரில் உள்ள மின்சார கனரக வாகன மின்னூட்டு உள்ளமைப்பை மேம்படுத்த, எதிர்வரும் ‘தொழில்நுட்பக் குறிப்புதவி 25’ (டிஆர்25) மறுஆய்வில் அவற்றைச் சேர்த்துக்கொள்வது பற்றி அது யோசிக்கலாம்,” என்று போக்குவரத்து மற்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர், சமூக ஊடகப் பதிவு ஒன்றில் கூறினார்.

‘டிஆர்25’ என்பது 2010ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சிங்கப்பூரின் தேசிய மின்சார வாகன மின்னூட்டுத் தரமாகும்.

மின்கல மாற்றம், நடமாடும் மின்னூட்டம் போன்ற அனைத்து புதிய மின்னூட்டத் தொழில்நுட்பங்களும் பரவலாக, அல்லது வர்த்தகப் பயன்பாட்டுக்கு முன்னர், ‘டிஆர்25’ல் உறுதிப்படுத்தப்படவேண்டும்.

நான்கு சோதனைத் திட்டங்கள் இருக்கும். அவை நான்கு ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்படும்.

‘பிஎஸ்ஏ கார்ப்பரேஷன்’ அதன் பாசிர் பஞ்சாங் துறைமுக முனையத்தில் ஒரு மின்கல மின்னூட்ட, மாற்று நிலையத்தைச் செயல்படுத்தும்.

‘எஸ்எம்ஆர்டி’க்குச் சொந்தமான ‘ஸ்ட்ரெய்ட்ஸ் ஃபரன்டியர்ஸ்’உம், ‘இகோசுவிஃப்ட்’உம் உருவாக்கிய கூட்டமைப்பு, துவாசில் ஒரு மின்கல மின்னூட்ட, மாற்று நிலையத்தைச் செயல்படுத்தும்.

மின்சார வாகன மின்னூட்டு நிறுவனமான ‘பவர்-அப் டெக்’, அதிகபட்சமாகப் பத்து நடமாடும் மின்னூட்டுச் சாதனங்களோடு, அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு மின்னேற்றியையும் வழங்கும்.

அவை வேன்கள், லாரிகள், பேருந்துகள் போன்ற மின்சார வாகனங்களுக்கு மின்னூட்ட உதவியாக இருக்கும்.

குறிப்புச் சொற்கள்