சிங்கப்பூர் குதிரைப் பந்தய மன்றம் சனிக்கிழமை ( அக்டோபர் 5) நடத்திய இறுதிப் பந்தயங்களைக் காண கிராஞ்சியில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கூடினர்.
124 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள மன்றம் வீடமைப்பு, மேம்பாட்டுப் பணிகளுக்கு வழிவிட்டு மூடப்படவிருக்கிறது.
சிங்கப்பூரில் 1842ஆம் ஆண்டு முதல் குதிரைப் பந்தயங்களை அது நடத்திவந்துள்ளது.
குதிரைப் பந்தயத்திற்குப் பிரியாவிடை அளிக்கும் வகையில் இறுதி நாளில் 10 பந்தயங்கள் நடைபெற்றன.
சிங்கப்பூர் தங்கக் கிண்ணத்துக்கான போட்டிகளாக அவை நடத்தப்பட்டன.
முன்னதாக, இறுதி நாள் பந்தயங்களைக் காண ஏறக்குறைய 10,000 பேர் திரள்வர் என்று எதிர்பார்ப்பதாக மன்றம் கூறியிருந்தது.
பார்வையாளர் இருக்கைகளுக்கான (Grandstand Level 1) இலவச நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் இணையத்தின்வழி வெகுவிரைவில் பெற்றுக்கொள்ளப்பட்டன.
குறைவான எண்ணிக்கையில் இத்தகைய இலவச நுழைவுச்சீட்டுகளை மன்ற வளாகத்தில் செப்டம்பர் 21, 28, அக்டோபர் 5ஆம் தேதிகளில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
அக்டோபர் 5ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஏறத்தாழ 100 பேர் இவற்றைப் பெற வரிசையில் காத்திருந்தனர்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தருணத்தில் பங்கெடுக்க வந்ததாகச் சிலர் கூறினர்.
பார்வையாளர்களில் சிலர் இந்தோனீசியா போன்ற அண்டை நாடுகளிலிருந்து இதற்காகவே வந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினர்.
பல்வேறு வயதினரும் மன்ற வளாகத்தைச் சுற்றிப்பார்த்து, படமெடுப்பதில் முனைந்தனர்.
சிங்கப்பூர் விளையாட்டு மன்றமாக 180 ஆண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்ட இந்த மன்றம், 1924ல் குதிரைப் பந்தய மன்றம் எனப் பெயர் மாற்றம் கண்டது.
சிராங்கூன் ரோட்டிலிருந்த அதன் பந்தயத் தடத்தை விற்றுவிட்டு 1933ஆம் ஆண்டு புக்கிட் தீமாவில் புதிய வளாகத்தை அது அமைத்துக்கொண்டது. பின்னர் 1999ல் கிராஞ்சிக்கு அது இடம்பெயர்ந்தது.
பிரிட்டனின் இரண்டாம் எலிசபெத் அரசியார் உட்படப் புகழ்பெற்ற பலர் இதற்கு வருகை தந்துள்ளனர். இளையர் ஒலிம்பிக் போட்டிகள் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளை ஏற்றுநடத்திய பெருமை இதைச் சாரும்.
2027ஆம் ஆண்டு மார்ச் மாதம் குதிரைப் பந்தய மன்றம் அமைந்திருக்கும் நிலப்பரப்பு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும்.