தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2030ல் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்திற்குப் புதிய வளாகம்

2 mins read
8cd91236-6701-4ebd-849f-d5ab085d717f
பூகிஸ் அருகே சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் புதிய வளாகம் அமையவுள்ளது. - படம்: சாவ் பாவ்

சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் 2030ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் புதிய, நிரந்தர வளாகத்தைக் கொண்டிருக்கும்.

முன்னாள் ரோச்சோர் நிலையம் அமைந்திருந்த இடத்திலும் அதையொட்டிய பகுதியிலும் அப்புதிய வளாகம் கட்டப்படும்.

இதுகுறித்து வியாழக்கிழமை (மார்ச் 6) நாடாளுமன்றத்தில் அறிவித்த கல்வி அமைச்சர் சான் சுன் சிங், அந்தப் புதிய இடம் வேலைக்குச் செல்பவர்கள் உட்பட அனைத்து வயதினருக்கும் ஏதுவாக இருக்கும் என தெரிவித்தார்.

பூகிஸ் அருகில் உள்ள அப்புதிய வளாகத்தால் பட்டப்படிப்பு, குறுகியகாலப் பயிற்சி வகுப்புகள், தொடர்கல்வி மற்றும் பயிற்சி என கிட்டத்தட்ட 40,000 மாணவர்களுக்குக் கல்வி வழங்க முடியும் என நம்பப்படுகிறது. இப்போது அந்த எண்ணிக்கை 31,000ஆக உள்ளது.

ஓஃபிர் சாலை, ரோச்சோர் சாலை சந்திப்பில் இருந்த முன்னாள் ரோச்சோர் நிலையம், அதன் நான்கு வண்ணமயமான வீவக வீடுகளுக்குப் பெயர்பெற்றது. அதனை இடிக்கும் பணிகள் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றன.

கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது பேசிய அமைச்சர் சான், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் தற்போதைய வளாகம் அனைவருக்கும் ஏதுவான இடத்தில் இல்லை என்றார்.

சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம், 2017ல் அரசாங்க நிதியுதவி பெறும் பல்கலைக்கழகமாக மாறியது. அது சிங்கப்பூரின் ஆறாவது தன்னாட்சிப் பல்கலைக்கழகமாகும்.

சென்ற மாதம் வரவுசெலவுத் திட்ட அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது, சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் புதிய வளாகம் வாழ்நாள் கற்றலை ஊக்குவிக்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்திருந்தார்.

அந்தப் பல்கலைக்கழகம் 2005லிருந்து வாடகை வளாகத்தில் இயங்கி வருகிறது.

அதன் மாணவர்களில் பெரும்பாலானோர் வேலைக்குச் செல்லக்கூடிய, பகுதி நேர மாணவர்கள்.

“சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம், நிதியுதவியுடன் பட்டப்படிப்பை மேற்கொள்ள அதிகமான சிங்கப்பூரர்களுக்கு உதவியுள்ளது. குறுகிய காலப் பயிற்சி பாடங்களும் ஒரு தகுதியாக அல்லது பட்டபடிப்பாகக்கூட கணக்கில் எடுத்துக்கொள்ளப்படலாம்,” என்றார் அமைச்சர் சான்.

தன்னாட்சிப் பல்கலைக்கழகமாக மாறியதிலிருந்து சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் ஏறத்தாழ 22,000 பட்டதாரிகளைக் கண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பகுதிநேரப் பட்டப்படிப்பு மாணவர்களின் வயது சராசரியாக 30ஆக உள்ளது. அவர்களுக்கான வகுப்புகள் சராசரியாக ஒரு வாரத்திற்கு மூன்று நாள்கள் பல்கலைக்கழக வளாகத்தில் மாலை நேரங்களில் நடத்தப்படுகின்றன.

சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகப் புதிய வளாக வடிவமைப்பு தொடர்பில், கல்வி அமைச்சு, அப்பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோரிடமிருந்து யோசனைகளைத் திரட்டவுள்ளதாகவும் அமைச்சர் சான் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்