உண்மை போல் மயக்கத்தைத் தரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பாலியல் உள்ளடக்கம் தொடர்பான சர்ச்சையினால், கோடீஸ்வரர் எலான் மஸ்கின் எக்ஸ் சமூக ஊடகத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ‘க்ரோக்’ சாட்போட் (chatbot Grok) அதிகம் பிரபலமாகிவிட்டது.
கடந்த 2025 டிசம்பர் பிற்பகுதியில் இருந்து எக்ஸ் தளம், தங்கள் ஒப்புதல் இல்லாமல் பிற பயனர்களின் ஆபாசப் படங்களை உருவாக்குவது குறித்த சர்ச்சையில் உள்ளது.
இந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கேட்கும் கேள்விக்கு தகவல்கள் வழங்குவதுடன், கேட்கும் படங்களையும் உருவாக்கும். தமிழ் உட்பட பல மொழிகளில் பதில் அளிக்கும்.
சர்ச்சையைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பயனாளர்களுக்கான கூகல், ஆப்பிள் செயலி கடைகளில் ‘க்ரோக்’ செயலி அதிக பிரபலமாக உள்ளதாக பகுப்பாய்வு நிறுவனமான ‘சென்சர்டவர்’ தரவுகள் தெரிவிக்கின்றன.
கூகல் செயலி தளத்தில், ஜனவரி மாதத்தின் பெரும்பாலான நாட்களில் முதல் 10 இடங்களில் ‘க்ரோக்’ இருக்கிறது.
ஆப்பிள் செயலி தளத்தில் ஜனவரி தொடக்கத்தில் இருந்து முதல் 25 இடங்களில் ‘க்ராக்’ உள்ளது.
ஜனவரி 15 அன்று, எக்ஸ்-ல் உள்ள க்ரோக் கணக்கு உண்மையான மக்களின் படங்களை மாற்றியமைப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்தியதாக அறிவித்தது. எனினும், அத்தகைய அம்சங்கள் தனிப்பட்ட ‘க்ரோக்’ செயலி, இணையத்தளம் ஆகியவற்றில் தொடர்ந்து கிடைக்கின்றன.
ஜனவரியில் இந்தோனீசியாவும் மலேசியாவும் ‘க்ரோக்’ செயலியைத் தடை செய்தன. அனுமதியில்லாத நெருக்கமான படங்களின் உருவாக்கம், விநியோகம் குறித்து எக்ஸ் உடன் சிங்கப்பூர் தற்போது ஆராய்ந்து வருவதாக தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
இணையப் பாதுகாப்பிற்கான சிங்கப்பூர் நெறிமுறைகளின் கீழ், எக்ஸ் சமூக ஊடகம் அதன் தளத்தில் தீங்கு விளைவிக்கும் மற்றும் பொருத்தமற்ற உள்ளடக்கங்களின் பரவலைத் தடுக்க வேண்டும் என்று தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறியது.
தொழில்நுட்பத்தால் சாத்தியப்படும் பாலியல் வன்முறையை ஆய்வு செய்யும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளர் இங் வி என், இத்தகைய செயலிகள் பாலியல் வன்முறையைக் கேளிக்கையாக்குகின்றன என்றார். இதுவே அதிகளவில் இடம்பெறும்போது அது சாதாரணமான ஒன்றாகிவிடுகிறது என்றார் அவர்.
இத்தகைய செயலிகளைத் தடை செய்வதுடன், சமுதாய எண்ணப்போக்கிலும் மாற்றம் வேண்டும் என்றார் தேசிய பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் டாக்டர் மிஷல் ஹோ.

