சிங்கப்பூர் - உஸ்பெகிஸ்தான் தடையற்ற வர்த்தக உடன்பாடு புதிய வாய்ப்புகளை வழங்கும்: மூத்த அமைச்சர் லீ

சிங்கப்பூர் - உஸ்பெகிஸ்தான் தடையற்ற வர்த்தக உடன்பாடு புதிய வாய்ப்புகளை வழங்கும்: மூத்த அமைச்சர் லீ

2 mins read
d3dfb76c-cc05-4376-98b4-8433126b3941
மத்திய ஆசியாவிற்கான முதல் அதிகாரபூர்வப் பயணத்தை நிறைவுசெய்து, உஸ்பெகிஸ்தான் தலைநகர் தா‌‌ஷ்கென்டில் சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

தாஷ்கென்ட்: சிங்கப்பூருக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக உடன்பாடு, உள்ளூர் நிறுவனங்களுக்கு முன்பின் தெரியாத சந்தையில் நிலவும் நிச்சயமற்றதன்மையைக் குறைக்க உதவும் என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தெரிவித்திருக்கிறார்.

சேவைகள், முதலீடு, தெரிவுசெய்யப்பட்ட பொருள்களுக்கான வாய்ப்புகளையும் திறந்துவிடும் என்றும் அவர் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகமும் முதலீடும் குறைவாக இருந்தாலும் உள்கட்டமைப்புத் திட்டங்கள், ஆலோசனைச் சேவைகள், தகவல் தொழில்நுட்பம், கல்வி போன்ற துறைகளில் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் திரு லீ குறிப்பிட்டார்.

மத்திய ஆசியாவிற்கான முதல் அதிகாரபூர்வப் பயணத்தை நிறைவுசெய்து, உஸ்பெகிஸ்தான் தலைநகர் தா‌‌ஷ்கென்டில் சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

“சிங்கப்பூர் நிறுவனங்கள் பலவற்றுக்கு, உஸ்பெகிஸ்தான் தெரிந்த சந்தையன்று. அது எவ்வாறு இயங்குகிறது என்று அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு உறுதியாகத் தெரியாததால், நிச்சயமற்றதன்மை அதிகம் இருப்பதாக நினைக்கிறார்கள்,” என்று அவர் கூறினார்

“எனவே அங்கு ஆபத்து இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். தடையற்ற வர்த்தக உடன்பாடு இருந்தால், அது அந்த ஆபத்தைக் குறைக்க உதவும்,” என்றார் திரு லீ.

பரந்த அளவில் பார்க்கையில், சிங்கப்பூருக்கும் மத்திய ஆசியாவிற்குமான பொருளியல் தொடர்புகள் அடுத்த பத்தாண்டுகளில் நான்கு அல்லது ஐந்து மடங்கு வளரக்கூடும் என்று திரு லீ குறிப்பிட்டார்.

அண்டை நாடான கஸக்ஸ்தானின் தலைநகர் அஸ்தானாவில் விமான நிலையத் திட்டமொன்றில் சாங்கி விமானநிலையக் குழுமம் கொண்டிருக்கும் ஆர்வத்தை உத்தேச வாய்ப்பாக அவர் சுட்டினார்.

அணுசக்தி குறித்தும் திரு லீ பேசினார். எரிசக்தி வளங்களில் அதுவும் ஒன்றாக இருக்கக்கூடும் என்ற சிங்கப்பூரின் மதிப்பீட்டை இந்தப் பயணத்தில் கண்ட அம்சங்கள் உறுதிசெய்திருப்பதாக அவர் சொன்னார்.

தடையற்ற வர்த்தக உடன்பாட்டிற்குரிய பேச்சைத் தொடங்குவதற்கு, இரு நாடுகளும் அதிகாரபூர்வமாக ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் அடியை எடுத்துவைத்துள்ளன. இதன் தொடர்பில் இருதரப்பும் கூட்டறிக்கையொன்றில் கையெழுத்திட்டன.

மத்திய ஆசியாவில் ஆக அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடு உஸ்பெகிஸ்தான். அதன் மக்கள்தொகை 38 மில்லியனுக்கும் அதிகம். உஸ்பெகிஸ்தான், கூடுதல் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முயன்றுவரும் நிலையில் அதன் பொருளியல் சந்தையைத் திறந்துவிடுகிறது.

விமானத் தொடர்புகள் மேம்படுத்தப்பட்டால் உஸ்பெகிஸ்தானின் உயர்தரப் பழங்களும் காய்கறிகளும் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் திரு லீ சொன்னார்.

உஸ்பெகிஸ்தான் 2025ஆம் ஆண்டில் திராட்சை, உலர் திராட்சை, பீச், செர்ரி, வெங்காயம், முட்டைக்கோஸ் உள்ளிட்ட கிட்டத்தட்ட 2.1 பில்லியன் அமெரிக்க டாலர் ($2.7 பில்லியன்) மதிப்பிலான பழங்களையும் காய்கறிகளையும் ஏற்றுமதி செய்துள்ளது.

உஸ்பெகிஸ்தானுக்கு முன்னர், திரு லீ மத்திய ஆசியாவிற்கான இருநாட்டுப் பயணத்தின் முதற்கட்டமாக கஸக்ஸ்தான் சென்றிருந்தார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்தடையற்ற வணிகம்வர்த்தகம்உடன்பாடுலீ சியன் லூங்செய்தியாளர்சந்திப்புஆசியாகஸக்ஸ்தான்பயணம்