வலுவடையும் சிங்கப்பூர்-வியட்னாம் உறவு

2 mins read
e8455154-83cc-43f2-8e61-bb4029e650c0
நாடாளுமன்றக் கட்டடத்தில் வியட்னாம் தலைவர் தோ லாமுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. உடன் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூருக்கும் வியட்னாமுக்கும் இடையிலான உறவு அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

பாதுகாப்பு, தற்காப்பு ஆகியவற்றுடன் மறுபயனீட்டு எரிசக்தி, மின்னிலக்கப் பொருளியல் போன்ற வளர்ந்துவரும் துறைகளிலும் இருநாட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வகைசெய்யும் பங்காளித்துவ ஒப்பந்தம் புதன்கிழமை (மார்ச் 12) கையெழுத்தானது.

புதிய விரிவான உத்திபூர்வ பங்காளித்துவம் (CSP), 2013ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கும் வியட்னாமுக்கும் இடையே உருவான அத்தகைய பங்காளித்துவத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 2023ஆம் ஆண்டு கையெழுத்தான பசுமை-மின்னிலக்கப் பொருளியல் பங்காளித்துவத்தைத் தொடர்ந்து புதிய விரிவான உத்திபூர்வ பங்காளித்துவ ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.

சிங்கப்பூர் வந்திருக்கும் வியட்னாம் தலைவர் தோ லாமுடன் நடந்த கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், “புதிய விரிவான உத்திபூர்வ பங்காளித்துவம் சிங்கப்பூருக்கு முக்கியமானது; முதன்முறையாக ஆசியான் உறுப்பு நாடு ஒன்றுடன் இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருப்பது அதற்குக் காரணம். சிங்கப்பூருக்கும் வியட்னாமுக்கும் இடையே உள்ள அதிக நம்பிக்கை, நாங்கள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகள், மேலும் ஒன்றாக சாதிக்கக்கூடியவை ஆகியவற்றை இந்த ஒப்பந்தம் எடுத்துக்காட்டுகிறது,” என்று குறிப்பிட்டார்.

தற்காப்பு, பாதுகாப்பு போன்ற உத்திபூர்வ துறைகளில் ஒன்றாக செயல்பட்டு எல்லை தாண்டிய குற்றச் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது, மனிதாபிமான உதவி வழங்குவது, பேரிடர் நிவாரணம் அளிப்பது போன்றவற்றில் எவ்வாறு இருநாடுகளும் இணைந்து பணியாற்றும் என்பதை புதிய விரிவான உத்திபூர்வ பங்காளித்துவம் விவரிப்பதாக திரு வோங் விளக்கினார்.

“முக்கியமாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கரிமப் புள்ளிகள், கடலடிக் கம்பித் தொடர்பாற்றல், மின்னிலக்கப் பொருளியல் போன்ற புதிய, வளர்ந்துவரும் துறைகளில் ஒத்துழைப்பை ஆழமாக்க இருதரப்புக்கும் இருக்கும் கடப்பாட்டை ஒப்பந்தம் வெளிப்படுத்துகிறது,” என்றும் திரு வோங் குறிப்பிட்டார். நாடாளுமன்றக் கட்டடத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் திரு வோங்கும் வியட்னாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான திரு லாமும் பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்த ஒப்புக்கொண்டனர்.

தற்காப்பு, பாதுகாப்பு ஆகியவற்றில் அணுக்கமாகச் செயல்படுவதுடன் அனைத்துலக மற்றும் வட்டார அளவிலான மாநாடுகளை நடத்துவதிலும் இரு தரப்பும் ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொள்ளும். இரு தரப்புக்கும் இருக்கக்கூடிய ஒரே அக்கறைகளின் தொடர்பில் ஒன்றுக்கு மற்றொன்று ஆதரவளிக்கும்; குறிப்பாக ஆசியான் சமூக வளர்ச்சிக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு இது பொருந்தும்.

2050ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றிலும் குறைப்பது சிங்கப்பூர், வியட்னாம் இரண்டும் கொண்டுள்ள இலக்காகும். அதை நோக்கிய பயணத்திலும் இருநாடுகளும் மேலும் அணுக்கமாகச் செயல்படும்.

சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடனும் அமைப்புகளுடனும் இணைந்து திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளையும் நடைமுறைகளையும் வரையும் பொறுப்பு சிங்கப்பூர், வியட்னாம் வெளியுறவு அமைச்சுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று இருதரப்பும் கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்