தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பசுமைப் பொருளியல், புத்தாக்கத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சிங்கப்பூர்-வியட்னாம் ஒப்பந்தம்

2 mins read
e09a3fbb-83c1-479e-aeac-0d70b36992c4
பிரதமர் லீ சியன் லூங் (இடது) , வியட்னாமியப் பிரதமர் பாம் மின் சின் (வலது) முன்னிலையில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரும் வியட்னாமும் நீடித்த நிலைத்தன்மை உள்கட்டமைப்புகள், திறன் மேம்பாடு, புத்தாக்கத் திறன் பரிமாற்றம் ஆகியவற்றுக்குப் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

இருநாட்டுக்கும் இடையிலான பொருளியல் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்த ஒப்பந்தங்கள் வழிவகுக்கும்.

எரிபொருள் இணைப்பு, நீடித்த நிலைத்தன்மை, மின்னிலக்கத் தீர்வுகள், புத்தாக்கம் ஆகியவை புதிதாகத் தலையெடுத்துவரும் துறைகள். எனவே, சிங்கப்பூர்-வியட்னாம் இணைப்புக் கட்டமைப்பு உடன்பாட்டின்கீழ் இந்தத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாடுகளும் விரும்புகின்றன.

இந்த உடன்பாட்டின் விரிவாக்கத்தைக் குறிக்கும் கடிதங்களை இரு தரப்பும் திங்கட்கிழமை பரிமாறிக்கொண்டன. உடன்பாடு கையெழுத்தான 2005ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் விரிவாக்கம்.

பசுமைப் பொருளியல், புத்தாக்கம், திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் மூன்று புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் செய்யப்பட்டன.

வியட்னாமியத் தலைநகர் ஹனோய்க்கு மூன்று நாள் அதிகாரபூர்வப் பயணம் சென்றிருக்கும் பிரதமர் லீ சியன் லூங், வியட்னாமியப் பிரதமர் பாம் மின் சின்னுடன் கையெழுத்து நிகழ்ச்சியைப் பார்வையிட்டார்.

சென்ற டிசம்பர் மாத நிலவரப்படி, வியட்னாமின் இரண்டாவது பெரிய வெளிநாட்டு முதலீட்டாளர் சிங்கப்பூர். சிங்கப்பூரின் 11வது பெரிய வர்த்தகப் பங்காளி வியட்னாம்.

இணைப்புக் கட்டமைப்பு உடன்பாட்டை விரிவுபடுத்தும் கடிதங்களை இரண்டாம் வர்த்தக, தொழில் அமைச்சர் டான் சீ லெங்கும் வியட்னாமியத் திட்டமைப்பு, முதலீட்டு அமைச்சர் குயென் சீ ஜுங்கும் பரிமாற்றம் செய்து கொண்டனர்.

இதற்கு ஒரு நாள் முன்னதாக, இரு அமைச்சர்களும் வருடாந்தர சிங்கப்பூர்-வியட்னாம் இணைப்பு அமைச்சர்நிலை கூட்டத்தைக் கூட்டாக வழிநடத்தினர். புதிதாகத் தலையெடுத்துவரும் துறைகளில் ஒத்துழைக்கும் சாத்தியத்தை அவர்கள் கலந்து பேசினர். அதோடு, கல்வி, நிதி, தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு போன்ற துறைகளில் அடைந்துள்ள முன்னேற்றங்களையும் சுட்டிக்காட்டினர்.

பசுமையான, மின்னிலக்கப் பொருளியலுக்கு மாறிச்செல்லும் வியட்னாமுக்கு சிங்கப்பூர் துணைபுரிய முடியும் என்று டாக்டர் டான் கூறினார்.

திங்கட்கிழமை கையெழுத்தான மூன்று புதிய ஒப்பந்தங்கள் ஒன்றின்கீழ், சிங்கப்பூரிலும் வியட்னாமிலும் உள்ள திறனாளர்கள், ஒருவர் மற்றவரது நாட்டில் புத்தாக்கம் சார்ந்த பணிகளில் அனுபவம் பெறுவது எளிதாக்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்த கூட்டுப் பணிக்குழு அமைக்கப்படும். திட்டத்தின் மேல்விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

மனிதவள அமைச்சருமான டாக்டர் டான், திறன் மேம்பாட்டில் சீரிய நடைமுறைகளைப் பகிர்வதற்கான இரண்டாவது ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார்.

மூன்றாவது ஒப்பந்தம், நகர்ப்பகுதியில் நீடித்து நிலைக்கவல்ல உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கானது. என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் கூட்டாக அமைத்த ஆசிய உள்கட்டமைப்பு அமைப்பும் ஹோ சீ மின் மக்கள் குழுவும் இதில் கையெழுத்திட்டன.

செம்ப்கார்ப் யுட்டிலிட்டீஸ் நிறுவனமும் பெட்ரோவியட்னாம் டெக்னிக்கல் சர்விசஸ் நிறுவனமும் கடல்காற்று எரிசக்திக்காகத் தள ஆய்வு நடத்தவும் வியட்னாமிய அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். கடற்காற்று எரிசக்தியை வியட்னாமிலிருந்து சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய சாத்தியத்தை ஆய்வு நிர்ணயிக்கும்.

குறிப்புச் சொற்கள்