தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாக்காளர் பதிவேடு புதுப்பிப்பு: பிப்ரவரி 15 முதல் 28 வரை பொதுமக்கள் சரிபார்க்கலாம்

3 mins read
976ace82-1963-46a1-9218-9bfa0ba98f9c
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இடம்பெறும் வாக்காளர் பதிவேட்டின் இறுதிப் புதுப்பிப்பாக இது இருக்கலாம்.  - படம்: சாவ் பாவ்

சிங்கப்பூர் வாக்காளர் பதிவேடுகள் 2025 பிப்ரவரி 1ஆம் தேதி நிலவரப்படி அனைத்து தகுதியான வாக்காளர்கள் பெயர்களையும் கொண்டிருக்கும் வண்ணம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 15 முதல் 28 வரை பொதுமக்கள் புதுப்பிக்கப்பட்ட பதிவேடுகளைச் சரிபார்க்கலாம்.

சிங்கப்பூர் குடிமக்கள் வாக்காளர்கள் பதிவேடுகளில் தங்கள் விவரங்களைத் தேர்தல் துறை இணையத்தளத்தின் வாக்காளர் சேவைகள் வழியாகச் சரிபார்க்கலாம் அல்லது சிங்பாஸ் கைப்பேசிச் செயலியில் சுயவிவரப் பகுதியின்கீழ் சரிபார்க்கலாம் என்று தேர்தல் துறை இன்று (பிப்ரவரி 14) வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

பெயர்கள் விடுபட்டிருந்தால் அல்லது தேசிய அடையாள அட்டையில் உள்ளதிலிருந்து விவரங்கள் வேறுபட்டிருந்தால், குடிமக்கள் திருத்தங்களைத் தாக்கல் செய்யலாம்.

பதிவேட்டில், குறிப்பிட்ட தேர்தல் தொகுதியிலிருந்து பெயர் நீக்கப்பட்டதற்கான ஆட்சேபத்தையும் தெரிவிக்கலாம் என்று தேர்தல் துறை கூறியது.

சிங்கப்பூர் குடியிருப்பு முகவரி அல்லது தொடர்புகொள்ளக்கூடிய உள்ளூர் முகவரி கொண்ட 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய, எந்தவோர் எழுத்துபூர்வமான சட்டத்தின்கீழ் வாக்களிக்கத் தகுதி நீக்கம் செய்யப்படாத சிங்கப்பூர் குடிமக்கள் வாக்களிக்கத் தகுதி பெறுவர்.

கோரிக்கைகள், ஆட்சேபணைகளை தேர்தல் துறையின் இணையத்தளம் மூலமாகவோ அல்லது 11 நொவீனா ரைசில் உள்ள அதன் அலுவலகம், நாடெங்கும் உள்ள 113 சமூக மன்றங்கள், எஸ்ஜிசேவை நிலையங்கள், வெளிநாட்டுப் பதிவு நிலையங்களாக செயல்படும் 10 சிங்கப்பூர் வெளிநாட்டுத் தூதரகங்கள் ஆகியவற்றில் நேரில் சென்று தெரிவிக்கலாம் என்று தேர்தல் துறை தெரிவித்தது.

கோரிக்கைப் பட்டியல் மார்ச் 12 முதல் 19 வரை மேற்குறிப்பட்ட இடங்களில் பொதுமக்கள் சரிபார்ப்புக்கு வைக்கப்படும்.

பதிவேட்டில் உள்ள விவரங்களை மின்னணு முறையில் சரிபார்க்க இயலாதவர்களும் இந்த இடங்களில் நேரில் சென்று பார்க்கலாம்.

தேர்தல் துறை அலுவலகத்திற்குச் செல்ல நினைப்போர், இணையத்தளம் வழியாக முன்பதிவு செய்ய வேண்டும், அல்லது 1800-225-5353 என்ற எண்ணை அழைக்க வேண்டும். உதவி தேவைப்படுவோரும் அந்த நேரடித் தொலைபேசி எண்ணில் அழைக்கலாம்.

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இடம்பெறும் வாக்காளர் பதிவேட்டின் இறுதிப் புதுப்பிப்பாக இது இருக்கலாம். இந்த ஆண்டு நவம்பருக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

கடந்த தேர்தலில் வாக்களிக்கத் தவறியதற்காக பதிவேடுகளிலிருந்து பெயர்கள் நீக்கப்பட்டவர்கள் தங்கள் பெயர்களை மீண்டும் சேர்த்துக்கொள்ள தேர்தல் துறை இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

எனினும், பிரதமர் அலுவலகத்தின்கீழுள்ள துறையான தேர்தல் துறை, குடிமக்களை “முன்கூட்டியே விண்ணப்பிக்க” ஊக்குவித்தது. சட்டப்படி, தேர்தலை நடத்துவதற்கான உத்தரவாணை வழங்கப்பட்டவுடன் அடுத்த தேர்தலுக்குள் பெயர்களைச் சேர்க்க முடியாது என்று அது கூறியது.

ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முன்னர் வாக்காளர்கள் பதிவேட்டைப் புதுப்பிக்குமாறு பிரதமர் லாரன்ஸ் வோங் பதிவு அதிகாரிக்கு உத்தரவிட்டதாக தேர்தல் துறை முன்னதாக ஜனவரி 22 அன்று அறிவித்திருந்தது.

சிங்கப்பூர் தேர்தல் தொகுதி ஒவ்வொன்றுக்கும் ஒரு வாக்காளர் பதிவேடு உள்ளது. குழுத் தொகுதிகள், தனித் தொகுதிகளுக்கான மொத்தம் 31 வாக்காளர் பதிவேடுகள் குடியரசில் உள்ள அனைத்து தகுதிபெற்ற வாக்காளர்களையும் உள்ளடக்கியிருக்கும்.

வாக்காளர் பதிவேடுகள் கடைசியாக 2024 ஜூலையில் சான்றிதழ் பெற்றன. அப்போது சான்றளிக்கப்பட்ட பதிவேடுகளில் மொத்தம் 2,715,187 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். 2023ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன்னதாக 2023 ஜூலையில் இடம்பெற்ற கடைசித் திருத்தத்தில் இருந்த 2,709,455 வாக்காளர்களிலிருந்து இது 5,732 அதிகம்.

ஏப்ரல் 2020ல் சான்றளிக்கப்பட்ட பதிவேடுகளில் 2,653,942 வாக்காளர்கள் இருந்தனர். 2020 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தல் ஜூலை மாதத்தில் நடைபெற்றது.

2015 செப்டம்பர் 11 நடந்த தேர்தலுக்கு முன்னதாக, ஏப்ரல் மாதத்தில் பதிவேடுகள் சான்றளிக்கப்பட்டன.

2011ல், மே 7 தேர்தல் நடந்தது. பிப்ரவரி 22 அன்று பதிவேடுகள் சான்றிதழ் பெற்றன.

இந்த ஆண்டின் பொதுத் தேர்தலின் தொடக்கமாக, சிங்கப்பூரின் தேர்தல் தொகுதி எல்லை மறுஆய்வுக் குழு ஜனவரி 22 அன்று அமைக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்