தண்ணீர்க் கட்டணம் 2024 ஏப்ரல் மாதம் கனமீட்டருக்கு (1,000 லிட்டர்) 20 காசும், 2025 ஏப்ரல் மாதம் மேலும் 30 காசும் உயர்த்தப்படவிருக்கிறது.
இந்தக் கட்டண உயர்வால், பெரும்பாலான குடும்பங்கள் 2025ல் மாதந்தோறும் கூடுதலாக $4 முதல் $9 வரை (பொருள், சேவை வரி சேர்க்காமல்) கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் புதன்கிழமை தெரிவித்தது.
2020 நிலவரப்படி, வீவக வீடுகள் மாதத்திற்கு சராசரியாக 16.2 கனமீட்டர் தண்ணீரும் கூட்டுரிமை வீடுகள் 15 கன மீட்டர் தண்ணீரும் பயன்படுத்தின.
கட்டண உயர்வைச் சமாளிக்க, குறைந்த, நடுத்தர வருமானக் குடும்பங்கள் உதவிபெறும். சிங்கப்பூர் குடும்பங்களுக்குக் கூடுதல் உதவியளிக்கும் வாழ்க்கைச் செலவின ஆதரவுத் திட்டங்களைத் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் வியாழக்கிழமை அறிவிப்பார்.
தண்ணீர்க் கட்டணம் ஆகக் கடைசியாக 2017ல் 30 விழுக்காடு உயர்த்தப்பட்டது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 50 காசு உயர்வினால், ஒரு கனமீட்டர் தண்ணீரின் விலை $3.24 ஆக உயரும். இது 18 விழுக்காடு அதிகரிப்பு.
1997க்கும் 2000க்கும் இடையில், வீடுகளுக்கான தண்ணீர்க் கட்டணம் 120 விழுக்காடு உயர்த்தப்பட்டது.
அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவினம், பொருள், சேவை வரி உயர்வு, போக்குவரத்து கட்டண உயர்வு ஆகியவற்றுக்கு மத்தியில் நடப்புக்கு வரவிருக்கும் தண்ணீர்க் கட்டண உயர்வு, எளிதில் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல என்று பொதுப் பயனீட்டுக் கழகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
“தண்ணீர்க் கட்டண உயர்வு வரவேற்புக்குரியதாக இல்லாவிட்டாலும், அவசியமானது,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
தண்ணீரை உற்பத்தி செய்து, விநியோகிக்கும் செலவு அதிகரித்து வருவதாகவும், பருவநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய வறட்சிக்குத் தயார்ப்படுத்திக்கொள்ள உள்ளூர்த் தண்ணீர் உற்பத்தியில் அதிக முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகவும் கழகம் தெரிவித்தது.
2025 ஏப்ரல் மாதத்தில், நான்கில் மூன்று வீடுகளின் மாதாந்தர தண்ணீர்க் கட்டணம் பத்து வெள்ளிக்கும் குறைவாகவே அதிகரித்திருக்கும். ஓரறை, ஈரறை வீடுகளில் வசிப்போரின் கட்டணம் ஏறக்குறைய $4 அதிகமாக இருக்கும்.
பெரும்பாலான வீடுகளில் ஒவ்வொரு மாதமும் 40 கனமீட்டருக்குக் குறைவான தண்ணீரே பயன்படுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட நான்கு விழுக்காடு வீடுகள் 40 கனமீட்டருக்குமேல் தண்ணீரைப் பயன்படுத்துகின்றன. தண்ணீர் விரயத்தைக் குறைக்க, இந்த வீடுகளுக்கு ஒரு கனமீட்டர் தண்ணீருக்குக் கூடுதலாக 70 காசு விதிக்கப்படும்.
தண்ணீர்க் கட்டண உயர்வுக்குப் பிறகு, ஏறத்தாழ 75 விழுக்காடு தொழில்நிறுவனங்களின் தண்ணீர்க் கட்டணம் மாதத்திற்கு $25க்கும் குறைவாகவே அதிகரித்திருக்கும்.
உணவங்காடிக் கடைக்காரர்களில் நால்வரில் மூவரின் கட்டணம், மாதத்திற்கு $15க்கும் குறைவாகவே அதிகரித்திருக்கும்.
தண்ணீர்க் கட்டண உயர்வு ஈராண்டுகளில் படிப்படியாக நடப்புக்கு வரும்.
ஓரறை முதல் மூவறை வீடுகளில் வசிப்போர், பருவநிலைக்கு ஆதரவான வீடுகள் திட்டத்தின்கீழ் $50 பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி தண்ணீரைச் சிக்கனப்படுத்தும் குளியல் சாதனங்களை வாங்கிக் கொள்ளலாம்.
தொழில்நிறுவனங்கள் தண்ணீர் சிக்கனத்திறன் நிதியைப் பயன்படுத்தி தொழில்நுட்பத்தின் துணையுடன் தண்ணீர்ப் பயன்பாட்டையும் கட்டணத்தையும் குறைக்கலாம்.
பெரும்பாலும் தொழில்துறைகளுக்கு விநியோகிக்கப்படும் நியூவாட்டரின் விலை, 2025க்குள் கனமீட்டருக்கு 17 காசு அதிகரித்து $2.50 ஆக இருக்கும் என்றும் கழகம் தெரிவித்தது.