சுற்றுலாத் தொழில்துறை தொடர்ந்து மீட்சி கண்டு வருகிறது. இந்த நிலையில், சிங்கப்பூருக்கு இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 2.9 மில்லியனுக்கும் மேற்பட்ட பயணிகள் வந்தனர்.
இந்த எண்ணிக்கை, கொவிட்-19க்கு முந்திய எண்ணிக்கையில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்காகும்.
கடந்த 2019 முதல் காலாண்டில் சிங்கப்பூருக்கு வந்த பயணிகளின் எண்ணிக்கை 4.7 மில்லியன். இந்த ஆண்டு முதல் மூன்று மாதங்களில் இங்கு வந்த பயணிகளின் அளவு, 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 62 விழுக்காடாக இருக்கிறது என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் நேற்று தெரிவித்தது.
சிங்கப்பூருக்கு வந்த பயணிகளின் மொத்த எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பயணிகள் இங்கு தங்கிய கால அளவு அதிகமாக இருந்தது. 2019ல் அந்த அளவு சராசரியாக 3.34 நாள்களாக இருந்தன.
2023 முதல் மூன்று மாதங்களில் பயணிகள் இங்கு சராசரியாக 3.97 நாள்கள் தங்கினர்.
இவ்வேளையில், சிங்கப்பூரின் சுற்றுலாத்துறை எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில் கழகம், அந்தத் துறையைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து பாடுபட்டு சிங்கப்பூரில் உயர்தர சுற்றுலாத் தலங்கள் இருப்பதை உறுதி செய்யும்.
சிங்கப்பூரைப் பற்றிய மேலும் பல அம்சங்களை எடுத்துக்காட்டும் வகையில் கழகமும் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் சேர்ந்து $10 மில்லியன் நிதி ஒன்றைத் தொடங்குகின்றன.
சிங்கப்பூரின் சிறப்பு அம்சங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி அவற்றை சந்தைப்படுத்தும் வகையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை உருவாக்குவதற்கு அந்த நிதி ஆதரவு அளிக்கும்.
வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான், நேற்று சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு கண்காட்சி மையத்தில் நடந்த பயணத்துறைக் கழக தொழில்துறை மாநாட்டில் பேசினார்.
அந்தக் கூட்டு நிதியைக் கொண்டு சிங்கப்பூர் பின்னணியில் திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் உருவாக ஊக்கம் கிடைக்கும் என்று நம்புவதாக திரு டான் குறிப்பிட்டார்.
அத்தகைய படைப்புகள் அனைத்துலக ஊடக, பொழுதுபோக்கு அமைப்புகளுடன் சேர்ந்து உருவாக்கப்படும்.
இதன்மூலம் உள்ளூர் வல்லுநர்கள், அனைத்துலக வல்லுநர்களுடன் சேர்ந்து செயல்பட வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய சுற்றுலா வாழ்க்கைத் தொழில் இயக்கம் ஒன்றும் தொடங்கப்பட்டு இருக்கிறது.
உள்ளூர் மக்கள் இந்தத் தொழிலில் சேர்வதற்கு ஊக்கமூட்டுவது அதன் நோக்கம்.
சுற்றுலாத் துறையில் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை 2022 டிசம்பர் நிலவரப்படி 66,000 ஆகக் கூடியது. இது கொவிட்-19க்கு முந்தைய 2019ஆம் ஆண்டு நிலவரத்துடன் ஒப்பிடுகையில் ஏறக்குறைய 80 விழுக்காடாகும்.

