வாணவேடிக்கைகள், புதிய நம்பிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்றது சிங்கப்பூர்

2 mins read
4790d523-355c-4264-ab53-182aff2dc64f
மரினா பே வட்டாரத்தில் வாணவேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்கப் பெருங்கூட்டம் திரண்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர், புத்தாண்டைக் கோலாகலமான முறையில் வாணவேடிக்கைகளுடனும் 2026ஆம் ஆண்டு இன்னும் ஒளிமயமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடனும் வரவேற்றுள்ளது.

நள்ளிரவு மணி 12 ஆனவுடன் மண்ணில் இருந்தோரின் உற்சாகக் கூச்சல் விண்ணை முட்டியது. மரினா பே, காலாங் பேசின் வட்டாரங்களில் குழுமியிருந்தோர் வண்ணங்கள் நிறைந்த வானத்தை நோக்கி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

பலரும் கடந்த ஆண்டு எப்படி இருந்தது என்பதை நினைவுகூர்ந்தனர். 2026ஆம் ஆண்டு சிறப்பாய் இருக்க வேண்டும் என்பதை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டனர்.

மரினா பே சேண்ட்சில் உள்ள ‘த ‌ஷோப்பிஸ்’ கடைக்கு முன்புறம் சென்று வாணவேடிக்கைகளைக் கண்டு மகிழ்ந்த ஆயிரக்கணக்கானவர்களில் தொடர்புத் துறை நிபுணர் ஜுன் ஹானும் ஒருவர். இடம் கிடைக்கவேண்டும் என்பதற்காக இரவு 7.30 மணிக்கே அவர் அங்குப் போய்விட்டதாகச் சொன்னார்.

“சிங்கப்பூர் வெகுதூரம் முன்னேறியுள்ளது. அனைத்துலகப் புகழ்பெற்ற நாடாக இதனைப் பார்க்கிறேன். பல நாடுகளைச் சேர்ந்தோரையும் இங்குப் பார்க்கமுடிகிறது. நம் நகரத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,” என்றார் 23 வயது ஜுன்.

‘த காலாங்’ (முன்னைய பெயர் சிங்கப்பூர் விளையாட்டு மன்றம்) முன்புறமும் ஏராளமானோர் கூடினர். கே-போப் குழுவின் சூப்பர் ஜூனியரின் இசைக்கச்சேரியும் 35 நிமிட வாணவேடிக்கைகளும் அங்கு இடம்பெற்றன.

இரவு எட்டு மணிக்கெல்லாம் காவல்துறையினர், ஜூபிளி பாலம், ஃபுல்லர்ட்டன் நீர்முகப்பு, மெர்லயன் நீர்முகப்பு முதலிய பகுதிகளை மூடிவிட்டனர்.

எஸ்பிளனேட் நீர்முகப்பு, மரினா பே சேண்ட்ஸ் நீர்முகப்பு, ஹெலிக்ஸ் பாலம் முதலியனவும் இரவு மணி 10.40க்கு மூடப்பட்டன. விளையாட்டரங்க ஆற்றோர நடைபாதை, நீர் விளையாட்டு நிலையம் முதலிய பகுதிகள் இரவு மணி 11.10க்கு மூடப்பட்டன.

குடியிருப்புப் பேட்டைகளிலும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டின. பூன்லே, கியட் ஹோங், மார்சிலிங், நீ சூன், பொங்கோல், தெம்பனிஸ், உட்லண்ட்ஸ் உள்ளிட்ட வட்டாரங்களில் புத்தாண்டை வரவேற்கும் நிகழ்ச்சிகளும் கொண்டாட்டங்களும் நெடு நேரம் நீடித்தன. வெளிநாட்டு ஊழியர்கள் வசிக்கும் 10க்கும் மேற்பட்ட தங்குவிடுதிகளிலும் ஐந்து பொழுதுபோக்கு நிலையங்களிலும் நேரடி நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. உணவுக் கூடங்களும் கேளிக்கை விளையாட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஏழு குடியிருப்புப் பேட்டைகளிலும் மக்கள் கழகம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது. மதுபானமற்ற நடனம், தீ சாகசம் போன்றவை அவற்றுள் சில.

ஒன் பொங்கோல் சமூக நடுவத்தில் மாலையிலிருந்தே ஓவியம் வரைதல், சமூகப் படைப்புகள் எனப் பல நடவடிக்கைகள் இடம்பெற்றன.

இரவு மணி 11.45க்குத் துணைப் பிரதமர் கான் கிம் யோங், குடியிருப்பாளர்களுடன் சேர்ந்து புத்தாண்டை வரவேற்கத் தயாரானார்.

சிற்றுரை ஆற்றிய அவர், 2025, சவால்மிக்க ஆண்டாய் இருந்ததாகச் சொன்னார். சிங்கப்பூரில் உள்ள அனைவரும் நாடு முன்னேறிச் செல்ல ஒன்றிணைந்து உழைத்ததாகவும் அவர் பாராட்டினார்.

2026ல் சவால்களையும் நிச்சயமற்ற சூழல்களையும் எதிர்நோக்க நேரிடலாம் என்றார் திரு கான். ஆயினும் மக்கள் ஒன்றாகச் சேர்ந்து செயல்பட்டால் இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாகவே இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்