உலகளாவிய நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில் அரசாங்கமும் மக்களும் அணுக்கமாக இணைந்து செயல்பட்டால் சிங்கப்பூர் தொடர்ந்து நிலையான, வளமான நாடாக இருக்கும் என பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
தற்போதைய உலகளாவிய நிலவரத்தை அடர் மேகங்கள், அடிக்கடி பெய்த மழையுடன் கூடிய சிங்கப்பூரின் அண்மைய வானிலையுடன் ஒப்பிட்ட அவர், “புயல் காற்று வீசும்போதுகூட நாம் கவலைப்படத் தேவையில்லை. நாம் கைகோத்து முன்னேற முடியும் என நான் நம்புகிறேன். நாளை நிச்சயமாக சிறப்பாக இருக்கும்,” என்றார்.
நிதி அமைச்சருமான திரு வோங், கரையோரப் பூந்தோட்டத்தில் திங்கட்கிழமை (ஜனவரி 27) நடைபெற்ற ‘ரிவர் ஹொங்பாவ் 2025’ நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் மாண்டரின் மொழியில் பேசினார்.
“இந்த ஆண்டு சிறப்பான ஆண்டு. பொதுத் தேர்தலை நாம் நடத்தவிருக்கிறோம்.
“தேர்தல் எப்போது என பலரும் என்னிடம் கேட்டுள்ளனர். அது பாம்பு ஆண்டில் என்பதை நான் நிச்சயமாக கூற முடியும்,” என்றார் அவர்.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங்குடன் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் வோங், 2025ல் எஸ்ஜி60 கொண்டாடப்படுவதாகவும் கடந்த காலத்தைப் பற்றி நினைத்துப் பார்த்து புதிய அத்தியாயத்தை எதிர்பார்க்க சிங்கப்பூரர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகவும் இருக்கும் என்றார்.
1987 முதல் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் ரிவர் ஹொங்பாவ் நிகழ்ச்சி, 2024ல் 1.01 மில்லியன் வருகையாளர்களை ஈர்த்தது.
இவ்வாண்டின் நிகழ்வுகள் பிப்ரவரி 5 வரை நடைபெறும். புதன்கிழமை (ஜனவரி 29) முதல் பிப்ரவரி 5 வரை இந்த நிகழ்ச்சி பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை நடைபெறும். நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் சீன குலமரபுச் சங்கங்களின் சம்மேளனம், சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழிற்சபை, எஸ்பிஎச் மீடியாவின் சீன ஊடகப் பிரிவு, சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம், மக்கள் கழகம் ஆகியவை ‘ரிவர் ஹொங்பாவ் 2025’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கின்றன.