மின்னிலக்கமயமாதல், பசுமைக்கான மாற்றம், சுகாதாரம் போன்ற முக்கியப் பொருளியல் அம்சங்களில் ஜப்பானும் சிங்கப்பூரும் ஒருங்கிணைவதை மறுவுறுதி செய்துகொண்டுள்ளன.
என்டர்பிரைஸ் சிங்கப்பூர் எஸ்ஜி அமைப்பும் ஜப்பானின் வெளிநாட்டு வர்த்தக அமைப்பும் வியாழக்கிழமை (ஜூலை 2) நடந்த நிகழ்ச்சியில் இருநாட்டு ஒத்துழைப்புக்கானப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. அந்த நிகழ்வில் அந்த உடன்பாடு மூன்று ஆண்டுகளுக்கு மேலும் நீட்டிக்கப்பட்டது.
கையெழுத்தான பங்காளித்துவ ஒப்பந்தப்படி அரசாங்க ஆதரவுபெற்ற அமைப்புகள் தற்போது நடப்பில் உள்ள ஒத்துழைப்புக்கான அம்சங்களில் இருநாடுகளும் பகிரும் எதிர்கால இலக்குகளை அடையும் வகையில் அவற்றின் செயல்பாடுகளை மேற்கொள்ளும்.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ), பகுதிமின்கடத்தி, அதிவேக கணினித் தொழில்நுட்பம், பசுமை ஆற்றல் தீர்வுகள், கடல்சார் காற்று, ஹைட்ரஜன் வாயுவின் ஆய்வு போன்ற பல துறைகள் அந்த ஒத்துழைப்பில் அடங்கும்.
புதிய முன்னுரிமைக்கான அம்சமாக வாழ்வியல் அறிவியல், சுகாதாரம் ஆகியவையும் திட்டத்தில் இணைக்கப்பட்டன. இருநாடுகளும் ஒன்றுடன் ஒன்று இந்தத் துறைகளில் பல எதிர்கால இலக்குகளை அமைத்துள்ளன.
எனவே அவற்றில் கவனம் செலுத்துவதன் வழியாக இருநாடுகளின் பலமும், பகிரப்படும் ஆர்வமும் சிறப்பாக ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகளை வலுப்படுத்துகின்றன.
சிறிய நடுத்தர நிறுவனங்கள் பலனடையும்
என்டர்பிரைஸ் சிங்கப்பூர் எஸ்ஜியும் ஜெட்ரோவும் புதிய நிறுவனங்களுக்கு ஆதரவு நல்குவதையும் கடந்து, வலுவான தொழில்நுட்பத்துடன் புத்தாக்கத் திறன்கொண்ட பெரிய அளவில் வளர்ச்சியடையக்கூடிய சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கும் அவை உதவும்.
சிங்கப்பூரில் 70 ஆண்டுகளாக செயல்படுவதை நினைவுகொள்ளும் நோக்கத்துடன், ஜெட்ரோ நிறுவனம் ஒத்துழைப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது. 1956ஆம் ஆண்டில் ஜப்பான் வர்த்தக நிலையம் என்ற பெயரில் அது தொடங்கப்பட்டது.
சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையே அரசதந்திர உறவுகள் தொடங்கப்பட்ட 60ஆம் ஆண்டு நிறைவை இவ்வாண்டு இருநாடுகளும் கொண்டாடின.

