புகைமூட்டச் சிக்கலை எதிர்கொள்ள ஆசியான் உறுப்பு நாடுகளுடன் இணைந்து சிங்கப்பூர் ஒரு மையத்தை நிறுவும்: கிரேஸ் ஃபூ

புகைமூட்டச் சிக்கலை எதிர்கொள்ள ஆசியான் உறுப்பு நாடுகளுடன் இணைந்து சிங்கப்பூர் ஒரு மையத்தை நிறுவும்: கிரேஸ் ஃபூ

படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

03 Nov 2026 - 4:59 pm

2 mins read

இந்தோனீசியாவைத் தளமாகக் கொண்ட இந்த மையம், நிலம், காட்டுத் தீ, எல்லைதாண்டிய புகைமூட்டம் ஆகியவற்றை நிர்வகிப்பதற்கான ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்தும் என்று அவர் நாடாளுமன்றத்தில் கூறினார்.

நிலையான நிலம், சதுப்பு நில மேலாண்மை, பயிர்க் கழிவுகள் எரிப்பு குறித்த வழிகாட்டுதல்கள் போன்ற புகைமூட்டத்தின் மூல காரணங்களைக் கையாளும் முயற்சிகளின் செயலாக்கத்தை மேம்படுத்துவதற்காக, சிங்கப்பூர் இவ்வட்டாரத்தில் உள்ள பிற நாடுகளுடன் இணைந்து செயல்படும் என்றும் அமைச்சர் கிரேஸ் ஃபூ மேலும் கூறினார்.

ஆசியான் மட்டத்தில் எல்லை தாண்டிய புகைமூட்டம் எவ்வாறு கையாளப்படுகிறது என்பது குறித்து, ஹஸ்லினா அப்துல் ஹலீம் (ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி), ஹேனி சோ (மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி) உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.

அத்தகைய மையம் நிறுவப்படும்போது, ​​மீண்டும் மீண்டும் ஏற்படும் மாசுபாட்டைக் கையாள்வதற்கான பிற வட்டார முயற்சிகளுடன் அதுவும் இணையும்.

உதாரணமாக, சிங்கப்பூர் 1993ஆம் ஆண்டு முதல் ஆசியான் சிறப்பு வானிலை ஆய்வு மையம் என்ற கண்காணிப்பு நிலையத்தை நடத்தி வருகிறது. இது இவ்வட்டாரத்தில் உள்ள முக்கிய இடங்களைக் கண்காணித்து, புகைமூட்டம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கைகளையும் அறிவிப்புகளையும் வழங்கிவருகிறது.

நிலம், காட்டுத் தீ, அதன் விளைவாக ஏற்படும் புகைமூட்டத்தைத் தடுக்கவும், கண்காணிக்கவும், தணிக்கவும் ஆசியான் உறுப்பு நாடுகள் கூட்டாகச் செயல்படுவதற்கான முக்கியக் கட்டமைப்பாக எல்லைதாண்டிய புகைமூட்ட மாசுபாடு மீதான ஆசியான் ஒப்பந்தம் விளங்குகிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

சட்டபூர்வமாகக் கட்டுப்படுத்தும் இந்த ஒப்பந்தம் 2002ல் கையொப்பமிடப்பட்டு, 2003ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. இது, எல்லை தாண்டிய மாசுபாட்டைத் தடுக்கவும், கண்காணிக்கவும், தணிக்கவும் உறுப்பு நாடுகளைக் கடமைப்படுத்துகிறது.

‘எல்லை தாண்டிய புகைமூட்ட மாசு கட்டுப்பாட்டிற்கான ஆசியான் ஒருங்கிணைப்பு மையம்’ என்று அழைக்கப்படும் இந்த வட்டாரப் புகைமூட்ட மாசு மையம், இந்த ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். இருப்பினும், இதனைச் செயல்படுத்துவதற்கு, ஆசியான் அமைப்பில் உள்ள ஆறு உறுப்பு நாடுகள் இந்த மையத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை அங்கீகரிக்க வேண்டியது அவசியமாகும்.

சிங்கப்பூர் வரும் நாள்களில் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், மற்ற ஆசியான் உறுப்பு நாடுகளும் அவ்வாறே செய்யுமாறு வலுவாக ஊக்குவிக்கும் என்றும் அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
ஒருங்கிணைப்புபுகைமூட்டம்கிரேஸ் ஃபூ