காஸாவில் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பேருக்கு உதவி அவசரமாகத் தேவைப்படும் சூழலில் சிங்கப்பூர் தன்னால் இயன்றவரை செய்யும் என்று தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.
“காஸாவுக்குச் சிங்கப்பூர் மொத்தம் 25 மில்லியன் வெள்ளி மதிப்பிற்கும் மேலான மனிதாபிமான உதவியை 11 பகுதிகளாகத் தந்துள்ளது. அதில் ஆக அண்மையப் பகுதி, கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இனியும் மனிதாபிமான நிதித்திரட்டுக்கு உதவி புரியும் முயற்சிகளை முடுக்குவதற்காக அரசாங்கம் ஒரு மில்லியன் தாெகையை வழங்கவுள்ளது,” என்றும் திரு சண்முகம் கூறினார்.
‘ஹியுமேனிட்டி மேட்டர்ஸ்’ அமைப்பின் ஏற்பாட்டில் புதன்கிழமை (டிசம்பர் 31) நடைபெற்ற காஸா நிவாரணப் பொட்டலமிடுதல் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் சண்முகம், சிறப்புரை ஆற்றியபோது அவ்வாறு கூறினார்.
ஐந்தாவது முறையாக நடைபெறும் இந்நிகழ்ச்சிக்காகக் கிட்டத்தட்ட 150 தொண்டூழியர்கள், தஞ்சோங் காத்தோங் வட்டாரத்திலுள்ள கேரிஸ் டேபர்நெக்கல் தேவாலயத்தில் கூடி, மொத்தம் கிட்டத்தட்ட 18 டன் எடையுள்ள உதவிப்பொருள்களைத் தயாரித்தனர்.
காஸாவில் கிட்டத்தட்ட 70,000 பேர் கொல்லப்பட்டதாகவும் கிட்டத்தட்ட 2 மில்லியன் பேர் தங்கள் இடங்களிலிருந்து விலக்கப்பட்டதாகவும் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் உணவுப்பஞ்சத்தை அனுபவிப்பதாகவும் அமைச்சர் தமது உரையில் குறிப்பிட்டார்.
“இந்த உதவி, பணத்தின் அளவைப் பற்றியது அன்று. தேவைப்பட்டால் அதிக தொகையைத் திரட்ட முடியும் என எண்ணுகிறேன். ஆனால், உதவிப்பொருள்கள் தேவைப்படுவோர்க்கு எவ்வாறு சமர்ப்பிக்கப்படுகின்றன என்பதே கேள்வி,” என்று அவர் கூறினார்.
காஸாப் பகுதிக்கு அருகில் இருக்கும் ஜோர்தான் வலுவான ஆதரவு அளித்துள்ளபோதும் உதவி விநியோகம் பொறுத்தவரையில் எல்லாமே அதன் கட்டுப்பாட்டில் உள்ளது எனச் சொல்ல முடியாது எனத் திரு சண்முகம் குறிப்பிட்டார்.
“தேவைப்படுவோர்க்கு உதவிப்பொருள்களைச் சேர்ப்பது தற்போது ஆகப் பெரிய பிரச்சினையாக உள்ளது,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
‘ஹியுமேனிட்டி மேட்டர்ஸ்’ அமைப்பைப் பாராட்டிய திரு சண்முகம், அவர்களால் கிட்டத்தட்ட 2 மில்லியன் வெள்ளி திரட்டப்பட்டுள்ளதைச் சுட்டினார். ரத்த நாளங்களில் செலுத்துவதற்கான ஐவி திரவங்கள், வலி நீக்கிகள், உணவு, மருந்துப்பொருள்கள் ஆகியவை பொட்டலமிடப்பட்டு காஸா மக்களுக்காக ஜோர்தானுக்கு அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார்.
புத்தாண்டை வரவேற்கும் இந்தச் சமயத்தில் உலகில் துன்பப்படுவோரைப் பற்றி இரக்கத்துடன் நினைக்கும்படியும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். குறிப்பாக, உலகில் ஆகப்பெரும் மனிதாபிமான நெருக்கடி சூடானில் உருவெடுத்துள்ளதைக் குறிப்பிட்ட திரு சண்முகம், அதன்மீதான கவனம் போதிய அளவு செலுத்தப்படவில்லை என்றும் கருத்துரைத்தார்.
“தேவாலயம் ஒன்றில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், பெளத்தர்கள், இந்துக்கள், சமூக அமைப்புகள், மாணவர்கள், தனியார் துறையினர் உள்ளிட்டோர் இங்கு கூடியுள்ளதைக் காண்கிறீர்கள். பிற மனிதர்களுக்கான உணர்வு, இன, சமயக் கட்டமைப்புகளுக்குள் கட்டுண்டு கிடக்கவேண்டியதன்று என்பதை இது எடுத்துக்காட்டுகிறது,” என்றும் திரு சண்முகம் கூறினார்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று புக்கிட் தீமா ரட்சன்ய சேனைக் கட்டடத்தில் நாசவேலை உள்ளிட்ட சம்பவங்களுக்கிடையே சமூக ஒருமைப்பாட்டை எவ்வாறு நிலைநிறுத்துவது என்பது குறித்தும் திரு சண்முகம், நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பல இன மக்ககளைக் கொண்ட சிறிய நாடான சிங்கப்பூர், சுதந்திரம் பெற்ற தருணத்திலிருந்தே பல கலாசார மக்களைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் சண்முகம், ஐரோப்பா போன்ற பிற நாடுகளைக் காட்டிலும் மாறுபட்ட சூழலைக் கொண்டிருப்பதாகக் கூறினார்.
“இதுவரை நாங்கள் ஒரளவு நன்றாகவே செய்துள்ளோம். இருந்தபோதும் நாம் மற்ற இடங்களில் நடப்பவற்றிலிருந்தும் படிப்பினைகளைப் பெறுகிறோம்,” என்று அவர் கூறினார்.

