ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான பயணத்திற்காக சிங்கப்பூர் பேச்சுவார்த்தை நடத்தாது என்றும், இதுபோன்ற நீர்வழிகள் வழியாகப் பயணிப்பது உரிமை, சலுகை அல்ல என்றும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சிங்கப்பூர் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துமா அல்லது அதன் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் செலுத்துவதைக் கருத்தில் கொள்ளுமா என்பது குறித்து அல்ஜுனிட் குழுத்தொகுதியின் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபட்லி ஃபவ்ஸி எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) பதிலளித்தார் திரு விவியன்.
ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான பயணத்திற்காக பேச்சுவார்த்தை நடத்துவது, அனைத்துலக சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளைச் சீர்குலைக்கும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் தெரிவித்தார்.
‘‘இது எல்லை நாடுகளால் தீர்மானிக்கப்பட்ட சிறப்புரிமையோ, மன்றாடிப் பெற வேண்டிய உரிமையோ, அல்லது செலுத்த வேண்டிய சுங்க வரியோ அல்ல. இது ஒரு அடிப்படை உரிமை, சலுகை அல்ல,” என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் அமைச்சர்.
மலாக்கா நீரிணை, சிங்கப்பூர் நீரிணையைப் போலவே, ஹோர்முஸ் நீரிணையும் அனைத்துலகக் கப்பல் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படும் நீர்வழிப்பாதை என்று மேலும் விளக்கினார் திரு விவியன்.
இந்த உரிமை, சிங்கப்பூர் கையெழுத்திட்டுள்ள ஐக்கிய நாடுகள் கடல் சட்ட மாநாட்டில் முறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை அங்கீகரிக்காத நாடுகளுக்கும் இந்தக் கொள்கை பொருந்தும் என்றும், இது அவர்களுக்குச் சிக்கலிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழி அல்ல என்றும் திரு விவியன் மேலும் கூறினார்.
பல நாடுகளின் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க அனுமதித்துள்ளதாக ஈரான் முன்னதாகக் கூறியிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
இந்தப் பட்டியலில் பெரும்பாலும் ஆசிய நாடுகளே இடம்பெற்றுள்ளன; சீனா, இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகியவை இதில் அடங்கும்.
சிங்கப்பூரின் அணுகுமுறையானது புவிசார் அரசியலைவிட கொள்கையை அடிப்படையாகக் கொண்டது என்றும் குறிப்பிட்டார் திரு விவியன்.
தொடர்ந்து பேசிய அவர், “ஏன் இத்தகைய சட்டபூர்வமானதும் கண்டிப்பான வரையறையை எடுத்துக்கொள்கிறேன் என்று நீங்கள் யோசிக்கலாம்.
‘’மலாக்கா, சிங்கப்பூர் நீரிணைகள் ஒரு முக்கியமான நெரிசல்மிக்கப் பகுதி என்பதால், கடுமையான சட்ட வரையறையைப் பயன்படுத்துகிறேன்,’’ என்றார்.
ஹோர்முஸ் நீரிணையைவிடவும் மலாக்கா, சிங்கப்பூர் நீரிணைகள் வழியாகவே அதிக அளவிலான கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கடல் எண்ணெய் வர்த்தகம் நடக்கிறது என்றும், உலகளாவிய கொள்கலன் வர்த்தகத்தைப் பொறுத்தவரை, ஹோர்முஸ் நீரிணையைவிட இந்த வட்டாரத்தின் வழியாகவே அதிக வர்த்தகம் நடைபெறுகிறது என்றும் அவர் கூறினார்.

