தேர்தலில் சிங்கப்பூர் வெற்றி பெற்றுள்ளது: அதிபர் தர்மன்

2 mins read
523a3cba-5189-4975-a9ca-088004a6f2c5
முழு முயற்சியுடன் தேர்தலில் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் அதிபர் பாராட்டு தெரிவித்துள்ளார். - படம்: தர்மன் சண்முகரத்னம்/ஃபேஸ்புக்

பொதுத் தேர்தல் 2025 முடிவடைந்து உணர்வுகள் சமநிலை காணும் வேளையில், சிங்கப்பூர் இதில் வெற்றி பெற்றுள்ளது என்பது தெளிவாகத் தெரிவதாக அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (மே 4) தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் அவ்வாறு பதிவிட்டுள்ளார்.

ஒவ்வொரு வாக்காளரும் எப்படி வாக்களித்திருந்தாலும் நாட்டுக்கு ஆகச் சிறந்த வருங்காலம் வேண்டும் என்பதில் சிங்கப்பூரர்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இருப்பதாக அதிபர் கூறினார்.

மற்ற பல நாடுகளில் காணப்படுவதைப்போல அரசியலில் நம்பிக்கை இழப்பையோ கண்ணோட்டங்கள் மேலும் பிளவுபட்ட நிலையையோ நாம் காணவில்லை என்றார் அவர்.

இந்த நிலை வெகுகாலம் நீடித்திருக்க வேண்டும் என்று திரு தர்மன் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பொதுத் தேர்தலில் முழு முயற்சியுடன் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் அதிபர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பலரும் அரசியலுக்குப் புதியவர்கள் என்பதைச் சுட்டிய அவர், இருப்பினும் அவர்கள் புதிய சிந்தனைகளையும் திறன்களையும் கொண்டுவந்ததாகக் கூறினார்.

பிரசாரங்களை அமைதியான முறையில் உள்வாங்கிக்கொண்டு வாக்களித்த சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் திரு தர்மன் பாராட்டு தெரிவித்தார்.

மக்கள் செயல் கட்சியின் தலைமைச் செயலாளர் லாரன்ஸ் வோங்கிற்கு அவரது கட்சி பெற்றுள்ள தெளிவான அங்கீகாரத்திற்கு வாழ்த்துத் தெரிவித்தும் அடுத்த அரசாங்கத்தை அமைக்கும்படி அதிகாரபூர்வமாகக் கேட்டுக்கொண்டும் தாம் கடிதம் எழுதியிருப்பதாக அதிபர் குறிப்பிட்டார்.

அடுத்த நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொள்கைகள் தொடர்பில் நன்றாகச் சிந்தித்தும் மரியாதைக்குரிய வகையிலும் விவாதித்து, சிங்கப்பூரர்களுக்கு ஆகச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவர் என்று தாம் நம்புவதாக அதிபர் தர்மன் தமது பதிவில் கூறினார்.

குறிப்புச் சொற்கள்