கேசான் சிட்டி: பிலிப்பீன்சில் நடந்த அனைத்துலக உயிரியல் ஒலிம்பியாட் போட்டியில் சிங்கப்பூரைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் ஆளுக்கொரு தங்கப் பதக்கத்தை வென்றனர்.
இதன்மூலம், மொத்தம் 78 நாடுகள் பங்கேற்ற அப்போட்டியில் சீனாவுடன் சிங்கப்பூர் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டது.
என்யுஎஸ் உயர்நிலைப் பள்ளி மாணவர்களான நிக்கலஸ் இங், மாக் மன் இயூவும் முறையே தரவரிசையில் நான்காம், ஐந்தாம் இடத்தைப் பிடித்தனர். இருவருக்கும் வயது 17. சீன மாணவர்களே முதல் மூன்று இடங்களையும் கைப்பற்றினர்.
என்யுஎஸ் உயர்நிலைப் பள்ளியின் 17 வயது ராகவ் குமாரும் ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தின் 18 வயது வாங் யுன் சியும் தங்கப் பதக்கம் வென்ற மற்ற இரு மாணவர்கள்.
வருடாந்தர உயிரியல் ஒலிம்பியாட் போட்டியானது இவ்வாண்டு ஜூலை 20-27 தேதிகளில் பிலிப்பீன்சின் கேசான் சிட்டியில் நடைபெற்றது. உயிரியல் பாடத்தில் மாணவர்களின் கருத்தியல், செயல்முறை சார்ந்த அறிவுத்திறன் சோதிக்கப்பட்டது. அதில் மொத்தம் 298 மாணவர்கள் பங்கெடுத்தனர்.
முன்னதாக, ஜூலை 18 முதல் 24 வரை பிரான்சில் நடந்த அனைத்துலக இயற்பியல் ஒலிம்பியாட் போட்டியிலும் சிங்கப்பூர் மாணவர்கள் சாதித்தனர். ஒரு தங்கம், நான்கு வெள்ளி என மொத்தம் ஐந்து பதக்கங்களை வென்று, அவர்கள் பத்தாம் நிலையில் வந்தனர்.
இதனையடுத்து, உயிரியல், வேதியியல், புவியியல், கணிதம், அணுவியல், இயற்பியல், செயற்கை நுண்ணறிவு, தகவலியல் உள்ளிட்ட ஒலிம்பியாட் போட்டிகளிலும் அனைத்துலக இளையர் இயற்பியல் வல்லுநர் போட்டியிலும் சாதித்த சிங்கப்பூர் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 27ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை மூலம் கல்வி அமைச்சு பாராட்டு தெரிவித்துள்ளது.