சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் புழக்கத்தில் உள்ள சில சொற்கள் ‘ஆக்ஸ்ஃபர்டு’ ஆங்கில அகராதியில் அண்மையில் இணைக்கப்பட்டுள்ளன.
மொழிமாற்றம் செய்ய இயலாத சொற்கள் என்ற பிரிவின்கீழ் அவை சேர்க்கப்பட்டுள்ளன.
அல்லாமா, காயா டோஸ்ட் போன்ற சொற்கள் இந்த மாதம் (மார்ச்) அவ்வாறு அந்த அகராதியில் இணைக்கப்பட்டுள்ளன.
மலாய் மொழியிலிருந்து பெறப்பட்ட சொல்லான ‘அல்லாமா’ என்பது பேச்சுவழக்கில் பயன்படுத்தும் சொல்.
வியப்பு, அதிர்ச்சி, திகைப்பு, சினம் போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையிலான அதன் பயன்பாடு குறித்து 1952ஆம் ஆண்டு முதன்முதலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சில உணவுவகைகளின் பெயரும் அவ்வாறே அகராதியில் இணைக்கப்பட்டுள்ளன. மலாய்ச் சமையல் முறையின் தாக்கம் இரு நாடுகளிலும் இருப்பதை இது காட்டுகிறது.
மேலும், ‘கெத்துபாட்’ (பனை ஓலைகளில் முடையப்பட்ட சிறு பொட்டலத்தில் அவிக்கப்பட்ட அரிசி உணவு), ‘ஓத்தா-ஓத்தா’ (மீன் அல்லது இதர கடலுணவுகளை மசாலா, தேங்காய்ப் பால் சேர்த்து வாழையிலையில் மடித்துச் சமைக்கும் உணவு) போன்றவற்றுடன் ‘மீன் தலைக் கறி’ போன்ற சிலவகை உணவுகளுக்கு ஆங்கிலப் பெயரும் இணைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், உணவை வாங்கிச் செல்வதற்கு பொட்டலமிடும்படி கூறும் ‘தாபாவ்’ எனும் சொல்லும் ‘ஆக்ஸ்ஃபர்டு’ ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல், மிகவும் பாராட்டப்படக்கூடிய எனப் பொருள்படும் வகையில் ‘வ்வா’, ‘லா’ எனும் அடைமொழிகளுக்கு இடையில் ‘டெரர்’ என்ற சொல்லை இணைத்துக் கூறும் சொற்றொடரும் (Wah! So terror lah) அந்த அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2016ஆம் ஆண்டு ‘சிங்கப்பூர் ஆங்கிலச்’ சொற்கள் என்று ‘அங் மோ’ உள்ளிட்ட 19 சொற்கள் அந்த அகராதியில் இணைக்கப்பட்டன. 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி ‘கியாசு’ என்ற சொல் அந்த நாளுக்கான சொல்லாக அறிவிக்கப்பட்டது.

