சிங்கப்பூர் இளையர்களில் பெரும்பான்மையினர் (69 விழுக்காடு) தங்கள் பணியிடம் அனைவரையும் உள்ளடக்கியதாக உள்ளது என்று நம்பினாலும், கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் வேலையிடத்தில் பாகுபாட்டைப் பார்த்துள்ளனர் அல்லது அனுபவித்துள்ளனர் என்று அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அனைவரையும் உள்ளடக்கிய வேலையிடம் குறித்த ஆய்வில் 18 வயது முதல் 43 வயது வரையுள்ள 1,006 சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் பங்கேற்றனர்.
பணியிடங்களில் அனைவரையும் உள்ளடக்குவதன் முக்கியத்துவம், கண்ணோட்டம் பற்றிய இளையர்களின் கருத்துக்களையும், அதனுடன் அவர்களின் அனுபவத்தையும் அறிய, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழால் 2024 ஜூலை மாதம் பணிக்கப்பட்ட அந்த ஆய்வை, சந்தை ஆய்வு நிறுவனமான கந்தர் மேற்கொண்டது.
பங்கேற்றவர்களில் 61 விழுக்காட்டினர் பாலினம், இனம், வயது, ஒருவரது பின்னணி குறித்த வேறுபாடுகளின்றி அனைவரும் சமமாக நடத்தப்படுவதால், வேலையிடங்கள் அனைவரையும் உள்ளடக்கி உள்ளன என்று கூறினர். பாகுபாடு குறைவாக உள்ளது; பன்முகத்தன்மை தழுவப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
அனைவரையும் உள்ளடக்குவது என்பது முயற்சிகளை அங்கீகரிப்பதும் அதற்கு மதிப்பளிப்பும் என்று ஐந்தில் ஒருவர் கருதினார். அதே எண்ணிக்கையினர், ஆதரவான சூழலையும் கூட்டான தொடர்பாடலையும் கருதுகின்றனர்.
வேலைகளுக்கு விண்ணப்பிக்கும்போது பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (56 விழுக்காடு) அனைவரையும் உள்ளடக்குவது ஒரு முக்கியமான பரிசீலனை என்று கூறினர்.
வேலையைத் தேர்வுசெய்ய அனைவரையும் உள்ளடக்குவது தங்களுக்கு முக்கியமான காரணியன்று என்று 44 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
“நிறுவனம் அனைவரையும் உள்ளடக்கியதாக மாறுவது ஊழியரின் ஈடுபாடு, படைப்பாற்றல், உற்பத்தித்திறன் ஆகியவற்றை அதிகரிக்கிறது. ஊழியர்கள் மதிக்கப்படும்போது, அவர்கள் அதிகம் பங்களிக்க முனைகிறார்கள். இது சிறந்த செயல்திறனுக்கு வழிவகுக்கிறது,” என்று தேசிய பல்கலைக்கழக (என்யுஎஸ்) வணிகப் பள்ளியின், நிர்வாகவியல் அமைப்பு பிரிவின் துணை மூத்த விரிவுரையாளர் ஸ்ரீராம் ஐயர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மக்களின் பொதுவான பாகுபாடுகளை ஆய்வின் ஒரு பகுதி ஆராய்ந்தது.
பணியமர்த்தும் மேலாளர்களாக செயல்படுமாறு பங்கேற்றவர்களிடம் கேட்கப்பட்டபோது, கிட்டத்தட்ட 40 விழுக்காட்டினர், தகவல் தொழில்நுட்ப வேலைக்கு ஒரே தகுதிகளைக் கொண்ட, ஆனால் பார்வைக் குறைபாடுள்ள ஒருவருக்குப் பதிலாக பிரச்சினைகள் இல்லாத ஒருவரையே பணியமர்த்தினர்.
42 விழுக்காட்டினர், இருவருக்கும் இடையே தங்களுக்கு வேறுபாடு இல்லை என்றும் 18% பார்வைக் குறைபாடு உள்ளவரைத் தேர்ந்தெடுத்தனர் என்றும் கூறப்பட்டது.
மற்றொரு சூழ்நிலையில், சந்தைப்படுத்தல் பணிக்கு திருமணமாகி சிறிது கால இடைவெளிக்குப் பிறகு வேலைக்குத் திரும்புபவருக்குப் பதிலாக, அதே தகுதிகளைக் கொண்ட திருமணமாகாதவரை 39 விழுக்காட்டினர் தேர்ந்தெடுத்தனர்.
16 விழுக்காட்டினர் மட்டுமே சிறிது கால இடைவெளிக்குப் பின் மீண்டும் பணிக்கு வந்தவரைத் தேர்ந்தெடுத்தனர். 45 விழுக்காட்டினர், இரு விண்ணப்பதாரர்களையும் சமமாகப் பார்த்தனர்.
பணியமர்த்தல், பதவி உயர்வில் சில பணியிடங்கள் தங்களையறிமல் செயல்படும் பாகுபாடு ஒரு பொதுவான காரணம் என்று திரு ஸ்ரீராம் கூறினார்.
வேலையில் அமர்த்துவது, பதவி உயர்வது அளிப்பதில் தங்களையும் அறியாத பாகுபாட்டுப் போக்கைச் சில வேலையிடங்கள் எதிர்நோக்குகின்றன என்று திரு ஐயர் கூறினார்.
ஒரு நிறுவனத்தில் அனைவரையும் உள்ளடக்குவதற்கு உயர்மட்ட அணுகுமுறை தேவை என்று என்யுஎஸ் வணிகப் பள்ளி இணைப் பேராசிரியர் எமிலி டேவிட் நம்புகிறார்.
முதலாவதாக, அனைவரையும் உள்ளடக்குவது தங்கள் நிறுவனத்தின் உத்திபூர்வ முன்னுரிமை என்பதை உயர்மட்ட நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
அனைத்து மட்டங்களிலும் உள்ள மேலாளர்கள் வழிகாட்டுதல் நேரத்துக்கும், பெண்களுக்கும் சிறுபான்மையினருக்கும் வழங்கப்படும் வளர்ச்சி வாய்ப்புகளுக்கும் பொறுப்பேற்பது நிறுவனங்கள் எடுக்கக்கூடிய மற்ற நடவடிக்கைகள் என்று அவர் கூறினார்.

