ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பாத்தாம் தீவில் 16 வயது வளர்ப்பு மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சிங்கப்பூரரைக் காவல்துறை கைது செய்துள்ளது.
மாற்றாந் தந்தையான அந்த 50 வயது ஆடவர், ஈராண்டுகளுக்குமேல் அச்சிறுமிக்குத் தொந்தரவு தந்ததாகக் கூறப்பட்டது.
செப்டம்பர் 7ஆம் தேதி அந்த ஆடவர் செக்குப்பாங்கில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து இரண்டு கைப்பேசிகள், கடப்பிதழ் உட்படப் பல பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
“120 சம்பவங்களில் அவர் அச்சிறுமியுடன் பாலியல் உறவுகொண்டதாக விசாரணையில் தெரியவந்தது. வாராவாரம் பாத்தாம் வந்த அவர் ஒவ்வொரு முறையும் இத்தகைய குற்றச்செயலில் ஈடுபட்டார்,” என்று பேரிலேங் பிரிவு காவல்துறை செப்டம்பர் 21ஆம் தேதி கூறியது.
இந்தோனீசியச் சட்டத்தின்கீழ், 18க்குக் குறைவான வயதுடையோரிடம் பாலியல் உறவு கொள்வது குற்றமாகும்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரின் தோழி மூலம் இந்த விவகாரம் காவல்துறைக்குத் தெரியவந்தது.
மேற்கு ஜாவாவில் தனது பாட்டியுடன் வசித்து வந்த அச்சிறுமி 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் தாயாருடன் வசிப்பதற்காக பாத்தாம் வீட்டிற்கு வந்தார். அப்போதிருந்து சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஆடவரின் கொடுமைகளிலிருந்து தப்பிக்க உதவும்படி இம்மாதம் 7ஆம் தேதி, சிறுமியின் தாயார் தோழியின் உதவியை நாடினார்.
ஆடவர் தன்னைக் கொன்றுவிடப் போவதாக அடிக்கடி மிரட்டியதால் மகள் குறித்துக் காவல்துறையில் புகாரளிக்க அஞ்சியதாகத் தாயார் கூறினார்.
2016ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சிறுவர் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதாகக் கூறப்படுவது தொடர்பில் கூடுதல் விசாரணைக்காக ஆடவரைக் காவல்துறை தடுத்து வைத்துள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 5 முதல் 15 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். பாதிக்கப்பட்ட சிறுமியின் மாற்றாந் தந்தை என்பதால் கூடுதலாக, தண்டனைக்காலத்தில் மூன்றில் ஒரு பங்கு சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என்று காவல்துறை கூறியது.

