கடந்த புத்தாண்டு தினத்திலிருந்து ஜோகூர் பாருவில் குப்பை போட்டதற்காக ஐந்து சிங்கப்பூரர்கள் பிடிபட்டுள்ளனர்.
அவர்கள் பிடிபட்ட 55 தனிநபர்களில் அடங்குவர் என்று தி ஸ்டார் ஊடகம் தெரிவித்தது. குப்பை போட்டதற்காக ஜோகூர் திடக்கழிவு மேலாண்மை, பொதுச் சுத்திகரிப்பு அமைப்பு (எஸ்டபிள்யுகார்ப்) அவர்களுக்கு உத்தரவாணை பிறப்பித்திருந்தது.
பிடிபட்ட 55 பேரில் 27 பேர் மலேசியர்கள் என்று நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் தெரிவித்ததாக மதர்ஷிப் ஊடகம் குறிப்பிட்டது. இதர 28 பேர் ஊழியர்கள், சுற்றுப்பயணிகள் ஆகியோரை உள்ளடக்கிய வெளிநாட்டவர்கள்.
சிகரெட் குப்பை, பான போத்தல்கள், மெல்லிழைத் தாள்கள் போன்ற குப்பையைப் போட்டவர்கள் பிடிபட்டதாக எஸ்டபிள்யுகார்ப் இயக்குநர் கூறினார். பிடிபட்ட சிங்கப்பூரர்கள் குப்பை போட்டதற்குப் பல காரணங்களைச் சொன்னதாகவும் அவர் தெரிவித்தார்.
“குப்பை போடவில்லை என்றும் அதை முதலில் பொறுக்கிக்கொண்டிருந்தேன் என்றும் ஒருவர் சொன்னார்,” என்று தெரிவித்த அவர், நாட்டின் சட்டம் தெளிவாக இருக்கும்பட்சத்தில் இதுபோன்ற காரணங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று குறிப்பிட்டார்.
“குப்பைத் தொட்டிகள் அருகில் இருக்கும்போதும் சிலர் தரையில் குப்பை போடுவதைப் பார்க்கும்போது வருத்தமாக உள்ளது,” என்று அந்த இயக்குநர் சுட்டினார்.
“ஜோகூர் பாரு தொடர்ந்து சுத்தமாக இருந்தபடி வருகையாளர்களை வரவேற்கும் நிலையில் இருக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்றும் அவர் கூறினார்.
நகர்ப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள ஊக்குவிக்க திடக் கழிவு, பொதுச் சுத்திகரிப்பு நிர்வாகச் சட்டத்தின் (சட்டம் 672) சட்டப் பிரிவு 77A மலேசிய அரசாங்கத்தால் முழுமையாக அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த முறியடிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
எஸ்டபிள்யுகார்ப், அவரவர் குடியுரிமையைக் கருத்தில்கொள்ளாமல் பாரபட்சமின்றி குப்பை போடும் தனிநபர்களைப் பிடிக்கும் நடவடிக்கைகளை எதிர்பாரா வேளைகளிலும் மேற்கொண்டு வருவதாக பெர்னாமா செய்தி நிறுவனம் முன்னதாகத் தெரிவித்தது.
இனி முறியடிப்பு நடவடிக்கைகள் திட்டமிட்டு நடத்தப்படும் என்று எஸ்டபிள்யுகார்ப் இயக்குநர் குறிப்பிட்டார்.

