மத்திய கிழக்கில் பாதுகாப்பாக உள்ள சிங்கப்பூர் நிறுவனங்கள்

மத்திய கிழக்கில் பாதுகாப்பாக உள்ள சிங்கப்பூர் நிறுவனங்கள்

2 mins read
f4ec318f-a318-4ce6-8e1a-55044814cd8b
மத்திய கிழக்கு வட்டாரங்களில் செயல்படும் சிங்கப்பூர் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கூறியுள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தனது செயல்பாடுகளுக்கு இதுவரை பெரும்பாதிப்பு இல்லை என்று சிங்கப்பூர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஊழியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் மோதல் வலுத்தால் அடுத்த கட்ட நடவடிக்கைக்கும் திட்டமிட்டிருக்கிறோம் என்றும் அவை குறிப்பிட்டன.

மத்திய கிழக்கு வட்டாரங்களில் உள்ள ஊழியர்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பதாக சிஎன்ஏவிடம் தெரிவித்த நிறுவனங்கள், அங்குள்ள நாடுகளுக்கான வர்த்தகப் பயணங்களைக் கட்டுப்படுத்தியுள்ளன.

சுர்பானா ஜூரோங் என்ற பொறியியல், நகர்ப்புற உள்கட்டமைப்பு ஆலோசனை நிறுவனம், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், குவைத் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் அலுவலகம் செல்லாமல் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கூறியது.

பிற வட்டாரங்களில் உள்ள நிறுவனத்தின் அலுவலகங்கள் கட்டங்கட்டமாகத் திறக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் மத்திய கிழக்குக்கான அனைத்து வர்த்தகப் பயணங்களையும் சுர்பானா நிறுவனம் நிறுத்தியுள்ளது. மத்திய கிழக்கிற்குச் சென்ற சிங்கப்பூர் ஊழியர்களும் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளனர்.

எஸ்டி எஞ்சினியரிங் நிறுவனத்தின் சிங்கப்பூர் ஊழியர்களில் கிட்டத்தட்ட 40 பேர் இன்னமும் மத்திய கிழக்கு வட்டாரத்தில் உள்ளன. அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை நிறுவனம் பகிர்ந்துகொண்டது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேலை செய்யவேண்டிய அவசியம் தற்போதைக்கு இல்லை என்றது சீடிரியம் நிறுவனம். நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்துவருவதாகவும் ஊழியர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் நிறுவனத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

விமானச் சரக்குகளைக் கையாளும் சேட்ஸ் நிறுவனம், சவூதி அரேபியாவிலும் ஓமானிலும் பாதுகாப்பான நடைமுறைகளின்கீழ் செயல்படுவதாகக் குறிப்பிட்டது.

அபுதாபியில் வட்டாரத் தலைமையகத்தைக் கொண்டுள்ள க‌ஷ்கிளவுட் நிறுவனம், வர்த்தக ரீதியாகத் தனது நிறுவனம் பாதிக்கப்படவில்லை என்றது.

சிங்கப்பூர் ஊழியர்கள் மத்திய கிழக்கு வட்டாரத்தில் இல்லை என்றபோதும் அங்குள்ள தனது நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி க‌ஷ்கிளவுட் நிறுவனம் சொன்னது.

குறிப்புச் சொற்கள்