இந்தோனீசிய ஆற்றில் சிமெண்ட் பூசப்பட்ட நிலையில் சிங்கப்பூர் முதியவரின் உடல் கண்டெடுப்பு; இருவர் கைது

இந்தோனீசிய ஆற்றில் சிமெண்ட் பூசப்பட்ட நிலையில் சிங்கப்பூர் முதியவரின் உடல் கண்டெடுப்பு; இருவர் கைது

2 mins read
6236a827-8267-4bec-82a4-e09d675944af
முதியவரின் உடல் நெகிழிப் பைகளாலும் படுக்கை விரிப்பாலும் சுற்றப்பட்டிருந்தது. - படம்: சிலாசாப் காவல்துறை/ஃபேஸ்புக்

இந்தோனீசியாவின் மிகப் பெரிய ஆறுகளில் ஒன்றில், சிமெண்ட் பூசப்பட்ட நிலையில் நெகிழிப் பைகளாலும் படுக்கை விரிப்பாலும் சுற்றப்பட்ட நிலையில் சிங்கப்பூர் முதியவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

கொலை வழக்கைப் பதிவு செய்து இந்தோனீசியக் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு தொடர்பாக மார்ச் 25ஆம் தேதியன்று இரண்டு பேரை இந்தோனீசியக் காவல்துறை கைது செய்தது.

80 வயது முதியவரின் உடல் சிலாசாப்பில் உள்ள சித்தாண்டுய் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டதாக மார்ச் 27ஆம் தேதியன்று இந்தோனீசியக் காவல்துறை தெரிவித்தது. மத்திய ஜாவாவில் உள்ள கடற்கரை நகரமான சிலாசாப், அந்த முதியவர் வசித்து வந்த தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து 380 கிலோமீட்டருக்கும் அதிக தொலைவில் உள்ளது.

முன்கூட்டியே திட்டமிடப்பட்ட இந்தக் கொலையின் பின்னணியில் இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் மூன்றாவது நபர் இன்னும் தலைமறைவாக உள்ளதாகச் சிலாசாப் காவல்துறைத் தலைவர் பூடி ஆதி புவோனோ தெரிவித்தார்.

இந்தக் கொலை, உயிரிழந்த முதியவர், ஒரு பெண், முக்கியக் குற்றவாளி ஆகியோருக்கு இடையிலான முக்கோணக் காதல் விவகாரத்துடன் தொடர்புடையதாக இருக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜகார்த்தாவின் தனா அபாங் பகுதியில் உள்ள தனது குடும்ப வீட்டில் வசித்து வந்த அந்த சிங்கப்பூரர் காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் எப்போது காணாமல் போனார் என்ற விவரத்தைப் திரு பூடி வெளியிடவில்லை.

பிப்ரவரி 20ஆம் தேதியன்று ஆற்றில் கண்டெடுக்கப்பட்டபோது அவரது உடல் மிகவும் சிதைந்த நிலையில் இருந்ததாகத் திரு பூடி கூறினார்.

பிரேதப் பரிசோதனை மற்றும் விசாரணையில், அவர் மூங்கில் தடியால் கழுத்தின் பின்புறத்தில் தாக்கப்பட்டதால் உயிரிழந்தது தெரியவந்தது.

திரு பூடியின் கூற்றுப்படி, அந்த சிங்கப்பூரர் பிப்ரவரி 16ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் மேற்கு ஜாவாவில் உள்ள சுக்காபூமியில் ஒரு வாடகை வீட்டில் வைத்துக் கொல்லப்பட்டுள்ளார்.

விசாரணை தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்