பேங்காக்: மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்து தாய்லாந்து காவல்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில் சிங்கப்பூர் ஆடவர் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மியன்மாரில் மோசடி நிலையங்களை நடத்தும் கும்பலைச் சேர்ந்த நபர்கள் தாய்லாந்தின் சொகுசு வீடுகளிலும் ஹோட்டல்களிலும் பதுங்கியிருந்தனர்.
கைது செய்யப்பட்ட 24 பேரும் அனைத்துலக அளவில் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 21 பேர் பிலிப்பீன்ஸ் நாட்டவர்கள், ஒருவர் மலேசியர், ஒருவர் சீனக் குடிமகன், மற்றொருவர் சிங்கப்பூரர்.
சமூட் பிராகான் வட்டாரத்தில் உள்ள ஒரு சொகுசு வீட்டில் 22 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சில தகவல்கள் கிடைத்தன.
அதைத்தொடர்ந்து பேங்காக்கில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பதுங்கியிருந்த இருவர் அதிகாரிகளிடம் சிக்கினர்.
மியன்மாரில் அடிக்கடி சோதனைகள் நடப்பதால் மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தாய்லாந்து வழியாகக் கம்போடிவுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்தது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

