தைவானின் நியூ தைபே நகரில் உள்ள ஏழு மீட்டர் உயரமான செங்குத்தான பாறையிலிருந்து கீழே விழுந்த 25 வயது சிங்கப்பூரரான திரு ஜேம்ஸ் படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புகழ்பெற்ற டிராகன் குகை பகுதியில் மலையேற்றத்தில் அவர் ஈடுபட்டிருந்தார். மே 16ஆம் தேதி காலை, கோங்லியாவ் மாவட்டத்தில் உள்ள லாங்டாங் கடற்கரைப் பகுதியில் விபத்து நிகழ்ந்துள்ளது. திரு ஜேம்ஸ் ஏறக்குறைய 7 மீட்டர் உயரமுள்ள பாறையிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவருக்குத் தலையிலும் கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், தலையிலிருந்து ரத்தம் கசிந்ததாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
காலை 11.19 மணியளவில் நியூ தைபே தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. கரடுமுரடான பாறைகள் நிறைந்த நிலப்பரப்பு என்பதால், ஏறக்குறைய இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மீட்புக் குழுவினர் அவரைப் பாதுகாப்பாக மீட்டனர்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும்போது அவர் சுயநினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பயன்படுத்திய மலையேற்றக் கருவிகள் குறித்தும், விபத்துக்கான காரணம் குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மலை ஏறுதல், முக்குளிப்பு (snorkelling) போன்ற நடவடிக்கைகளுக்குப் புகழ்பெற்ற டிராகன் குகைப் பகுதியில், இம்மாத தொடக்கத்தில் 44 வயது உள்ளூர் பெண் ஒருவர் 10 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

