தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போதைப்பொருள் கடத்தியதாக சிங்கப்பூரை சேர்ந்த இருவர் பிலிப்பீன்சில் கைது

2 mins read
05715fd7-2af6-4d2b-a52f-f620aed7123c
சிங்கப்பூரை சேர்ந்த தாயும் மகளும் மணிலாவின் நினோய் அகினோ அனைத்துலக விமான நிலையத்தில் பிலிப்பீன்ஸ் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். - படம்: சுங்கத்துறை, நினோய் அகினோ அனைத்துலக விமான நிலையம்

‘கொக்கெய்ன்’ போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் பொருளைக் கொண்டுசென்றதாகக் கூறப்பட்டும் சிங்கப்பூரர்களான தாயும் மகளும் பிலிப்பீன்சில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

14.36 கிலோ எடையுள்ள அதன் மதிப்பு 76.1 மில்லியன் பீசோஸ் (S$1.83 மில்லியன்) எனக் கூறப்பட்டது.

உணவகத்தில் பணிபுரியும் 63 வயது சித்தி ஆயிஷா அவாங்கையும் அவரது மகளும் ஒப்பனைக் கலைஞருமான 39 வயது அலவியா ஹனாஃப்பையும் மணிலாவில் உள்ள நினோய் அகினோ அனைத்துலக விமான நிலையத்தில் வியாழக்கிழமை அந்நாட்டுக் காவல்துறை கைது செய்தது.

அவர்கள் கத்தாரின் தோஹா நகரிலிருந்து பிலிப்பீன்சுக்கு வந்ததாக பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பயணிகளைப் பரிசோதிக்கும்போது அவர்கள் பிடிபட்டதாக அந்நாட்டுச் சுங்கத்துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி மணிலா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

விமான நிலையத்தில் இருக்கும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், அவர்களின் பயணப்பெட்டிகளைச் சோதனை செய்தபோது அதில் ‘கொக்கெய்ன் போதைப் பொருள்’ 341 உருண்டைகளாக உணவுப் பொட்டலங்களில் அடைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர்.

அவற்றைத் திண்பண்டங்கள் வைக்கும் பொட்டலங்களில் பரிசுப்பொருள்கள் போன்று வைக்கப்பட்டிருந்ததாகச் சிஎன்என் பிலிப்பீன்ஸ் தெரிவித்தது.

போதைப்பொருள்களை பிலிப்பீன்ஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பெண்கள் இருவரும் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் பிலிப்பீன்சுக்கு வருவதற்கு முன்பு கத்தாரின் தோஹா நகரிலும் ஐக்கிய அரபு சிற்றரசுகளிலும் துபாயிலும் இருந்ததாக கூறப்படுகிறது.

கத்தார், சிங்கப்பூர் நாடுகளின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுடன் பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் ஒருங்கிணைத்து சந்தேக நபர்களின் விவரங்களைக் கண்டறிவார்கள் எனப் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறினார்.

“எனக்கு எதுவும் தெரியாது. இது சட்டத்திற்கு விரோதமானது என அவர்கள் என்னிடம் சொல்லவில்லை” எனப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் சித்தி ஆயிஷா அவாங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“என் தாயாருக்கு எதுவும் தெரியாது என அவர் ஏறகெனவே கூறினார். அந்தப் பொட்டலத்தில் என்ன இருந்தது என அவருக்குத் தெரியாது,”என்று சித்தி ஆயிஷா அவாங்கின் மகளும் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் அலவியா ஹனாஃப், தன் முகத்தை மறைத்துகொண்டு செய்தியாளர்களிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்